Google சேவை விதிமுறைகள்

பயனுள்ள 5 ஜனவரி, 2022 | காப்பகப்படுத்தப்பட்ட பதிப்புகள் | PDFஐப் பதிவிறக்கு

நாடு சார்ந்த பதிப்பு: அமெரிக்கா

இந்த விதிமுறைகளில் என்ன கொடுக்கப்பட்டுள்ளது:

இந்த சேவை விதிமுறைகளைப் புறக்கணிக்கத் தோன்றுவது இயல்புதான் என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் Google சேவைகளைப் பயன்படுத்தும்போது எங்களிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதையும் உங்களிடம் நாங்கள் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதையும் தெளிவுபடுத்துவது முக்கியமானதாகும்.

Googleளின் வணிகம் வேலைசெய்யும் விதத்தையும், எங்கள் நிறுவனத்திற்குப் பொருந்தும் சட்டங்களையும், சரியாக இருக்கும் என்று நாங்கள் எப்போதும் கருதும் சில விஷயங்களையும் இந்தச் சேவை விதிமுறைகள் பிரதிபலிக்கும். இதன் விளைவாக எங்கள் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும்போது உங்களுடனான Googleளின் தொடர்பைத் தீர்மானிக்க இந்தச் சேவை விதிமுறைகள் உதவுகின்றன. உதாரணத்திற்கு, இந்த விதிமுறைகளில் பின்வரும் தலைப்புகள் இருக்கும்:

இந்த விதிமுறைகளைப் புரிந்துகொள்வது முக்கியம், ஏனெனில் எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் அவற்றை ஏற்கிறீர்கள்.

இந்த விதிமுறைகளைத் தவிர, தனியுரிமைக் கொள்கையையும் வெளியிடுகிறோம். நீங்கள் எவ்வாறு உங்கள் தகவலைப் புதுப்பிக்கலாம் நிர்வகிக்கலாம் ஏற்றலாம் நீக்கலாம் என்பதைப் படித்துப் புரிந்துகொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.

விதிமுறைகள்

சேவை வழங்குநர்

Google சேவைகளை வழங்குவதும், நீங்கள் ஒப்பந்தம் செய்துகொள்வதும் இந்த நிறுவனத்துடனே:

Google LLC
அமெரிக்காவின் டெலாவேர் மாகாண சட்டங்களின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, அமெரிக்கச் சட்டங்களின் கீழ் செயல்படுகிறது

1600 Amphitheatre Parkway
Mountain View, California 94043
அமெரிக்கா

வயது வரம்புகள்

உங்கள் சொந்த Google கணக்கை நிர்வகிப்பதற்கான வயது வரம்பிற்குக் கீழ் உள்ளவர் நீங்கள் எனில், Google கணக்கைப் பயன்படுத்துவதற்கு உங்கள் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ காப்பாளரின் அனுமதி உங்களிடம் இருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை உங்கள் பெற்றோரோ சட்டப்பூர்வ காப்பாளரோ படிக்குமாறு சொல்லவும்.

நீங்கள் பெற்றோராகவோ சட்டப்பூர்வ காப்பாளராகவோ இருந்து உங்கள் பிள்ளையை இந்தச் சேவைகளைப் பயன்படுத்துமாறு அனுமதித்தால், இந்த விதிமுறைகள் உங்களுக்கும் பொருந்தும் மேலும் இந்தச் சேவைகளில் உங்கள் பிள்ளையின் நடவடிக்கைக்கு நீங்கள்தான் பெறுப்பேற்க வேண்டியிருக்கும்.

சேவை-சார்ந்த கூடுதல் விதிமுறைகளிலும் கொள்கைகளிலும் விளக்கப்பட்டுள்ளவாறு சில Google சேவைகளைப் பயன்படுத்த கூடுதல் வயது வரம்புகள் தேவைப்படும்.

Google உடனான உங்கள் தொடர்பு

இந்த விதிமுறைகள் உங்களுக்கும் Googleளுக்கும் இடையேயான தொடர்பை விளக்குவதற்கு உதவுகின்றன. விளக்கமாகச் சொல்வதென்றால், நீங்கள் இந்த விதிமுறைகளைப் பின்பற்றுவதாக ஒப்புக்கொண்டால், எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குவோம். Googleளின் வணிகம் எவ்வாறு நடைபெறுகிறது மற்றும் நாங்கள் எவ்வாறு வருவாய் ஈட்டுகிறோம் என்பதும் இவற்றில் அடங்கும். “Google,” “நாங்கள்,” “எங்கள்” மற்றும் “நமது,” என்று சொல்லும்போது Google LLC மற்றும் அதன் இணை நிறுவனங்களைக் குறிப்பிடுகிறோம்.

எங்களிடம் இருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம்?

ஒரு விரிந்த எல்லைக்குட்பட்ட பயனுள்ள பலதரப்பட்ட சேவைகளை வழங்குதல்

கீழ்கண்ட விதிமுறைகளுக்கும் உட்பட்ட அதிகப்படியான சேவைகளை நாங்கள் வழங்குகிறோம், அவற்றில் இவையும் அடங்கும்:
  • ஆப்ஸும் தளங்களும் (Search மற்றும் Maps போன்றவை)
  • பிளாட்ஃபார்ம்கள் (Google Shopping போன்றவை)
  • ஒருங்கிணைக்கப்பட்ட சேவைகள் (வேறு நிறுவனங்களின் ஆப்ஸிலோ தளங்களிலோ உட்பொதிந்துள்ள Maps போன்றவை)
  • சாதனங்கள் (Google Nest போன்றவை)

இந்தச் சேவைகள் பலவற்றில் நீங்கள் ஸ்ட்ரீம் செய்யக்கூடிய அல்லது பயன்படுத்தக்கூடிய உள்ளடக்கமும் இருக்கும்.

எங்கள் சேவைகள் ஒன்றாக இணைந்து இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் ஒரு செயல்பாட்டிலிருந்து அடுத்த செயல்பாட்டிற்கு எளிதாக மாறலாம். உதாரணமாக, உங்கள் Calendar நிகழ்வில் முகவரி இருந்தால் நீங்கள் அதைக் கிளிக் செய்யலாம். அப்போது அந்த இடத்திற்கு எப்படிச் செல்லலாம் என்பதை Maps காட்டும்.

Google சேவைகளை உருவாக்குதல் மேம்படுத்துதல் புதுப்பித்தல்

எங்கள் சேவைகளை மேம்படுத்த புதிய தொழில்நுட்பங்களையும் அம்சங்களையும் தொடர்ந்து உருவாக்கி வருகிறோம். உதாரணமாக, ஒரே நேரத்தில் மொழிபெயர்த்தல் அம்சத்தை வழங்கவும் ஸ்பேமையும் மால்வேரையும் சிறப்பாகக் கண்டறிந்து தடுக்கவும் செயற்கை நுண்ணறிவையும் மெஷின் லேர்னிங்கையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்தத் தொடர்ச்சியான மேம்பாட்டின் ஒரு பகுதியாக சில நேரங்களில் அம்சங்களையும் செயல்பாடுகளையும் சேர்ப்போம் அல்லது அகற்றுவோம், எங்கள் சேவைகளின் வரம்பை அதிகரிப்போம் அல்லது குறைப்போம், புதிய சேவைகளை வழங்குவோம் அல்லது வழங்கும் பழைய சேவையை நிறுத்துவோம். ஒரு சேவையில் பதிவிறக்கக்கூடிய மென்பொருள் இருந்தாலோ தேவைப்பட்டாலோ அந்த மென்பொருளுக்கான புதிய பதிப்பு அல்லது அம்சம் வெளியிடப்படும்போது சில நேரங்களில் உங்கள் சாதனத்தில் அவை தானாகவே புதுப்பித்துக்கொள்ளும். சில சேவைகளுக்குத் தானியங்குப் புதுப்பிப்பு அமைப்புகளை நீங்கள் சரிசெய்ய வேண்டியிருக்கும்.

எங்கள் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும் விதத்தை எதிர்மறையாகப் பாதிக்கக்கூடிய வகையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்தாலோ ஒரு சேவையை நிறுத்துவதாக இருந்தாலோ முன்கூட்டியே அறிவிப்பை வழங்கிவிடுவோம். தவறான பயன்பாட்டைத் தடுத்தல், சட்டத் தேவைகளுக்காக வழங்குதல் அல்லது பாதுகாப்பு மற்றும் செயலாக்கச் சிக்கல்களைத் தீர்த்தல் போன்ற அவசரச் சூழ்நிலைகள் இதில் அடங்காது. உங்கள் உள்ளடக்கத்தை உங்கள் Google கணக்கிலிருந்து Google Takeout மூலம் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பையும் வழங்குவோம். இது பொருந்தக்கூடிய சட்டத்திற்கும் கொள்கைகளுக்கும் உட்பட்டது.

உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறோம்?

இந்த விதிமுறைகளையும் சேவை சார்ந்த கூடுதல் விதிமுறைகளையும் பின்பற்றுங்கள்

எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் வழங்கும் அனுமதியானது பின்வருவனவற்றுடன் நீங்கள் இணங்கும் வரை தொடர்கிறது:

எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு எங்கள் தனியுரிமைக் கொள்கை பொருந்தும் என்பதையும் ஏற்கிறீர்கள். கூடுதலாக, பொதுவான கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கும், எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவது குறித்த எதிர்பார்ப்புகளை அமைப்பதற்கும் பதிப்புரிமை உதவி மையம், பாதுகாப்பு மையம் போன்ற தகவல் மையங்களையும், கொள்கைகள் தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எங்கள் தொழில்நுட்பங்கள் பற்றிய விளக்கங்களையும் வழங்குகிறோம்.

எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு உங்களுக்கு அனுமதி அளித்தாலும், அவற்றில் உள்ள ஏதேனும் அறிவுசார் சொத்துரிமைக்கான அனுமதியை நாங்கள் தக்கவைத்துக் கொள்வோம்.

மற்றவர்களுக்கு மதிப்பளித்தல்

அனைவரும் மதிப்புமிக்க சூழலில் இருப்பதை நாங்கள் விரும்புகிறோம், எனவே பின்வரும் அடிப்படையான நடத்தை விதிமுறைகளை நீங்கள் பின்பற்றுவது முக்கியம்:
  • ஏற்றுமதிக் கட்டுப்பாடு, அனுமதிகள், ஆட்கடத்தல் தொடர்பான சட்டங்கள் உட்பட பொருந்தக்கூடிய சட்டங்களுடன் இணங்குதல்
  • தனியுரிமை, அறிவுசார் சொத்துரிமை உள்ளிட்ட பிறரின் உரிமைகளை மதித்தல்
  • உங்களுக்கோ மற்றவர்களுக்கோ தீங்கிழைக்காமல் அல்லது துன்புறுத்தாமல் இருத்தல் (அச்சுறுத்துதல் அல்லது அவ்வாறு செய்பவர்களை ஊக்கப்படுத்தாமல் இருத்தல்) - உதாரணமாக, தவறாக வழிநடத்துதல், ஏமாற்றுதல், சட்டவிரோதமான ஆள்மாறாட்டம், அவமானப்படுத்துதல், மிரட்டுதல், உபத்திரவம் கொடுத்தல் அல்லது மற்றவர்களைப் பின்தொடர்தல்
  • இந்தச் சேவைகளைத் தவறாகப் பயன்படுத்துதல், தீங்கிழைத்தல், தலையிடுதல், இடையூறு செய்தல் போன்றவற்றைச் செய்யாதீர்கள் — உதாரணமாக, மோசடியாக அல்லது ஏமாற்றுகிற வழிகளில் அவற்றை அணுகுதல் அல்லது பயன்படுத்துதல், மால்வேரைப் புகுத்துதல், அல்லது ஸ்பேமிங், ஹேக்கிங், எங்கள் சிஸ்டங்களையோ பாதுகாப்பு நடவடிக்கைகளையோ பைபாஸ் செய்தல். தேடல் முடிவுகளை உங்களுக்கு வழங்குவதற்காக இணையத்தை நாங்கள் அட்டவணைப்படுத்தும்போது, இணையதள உரிமையாளர்கள் தங்கள் இணையதளங்களின் குறியீட்டில் குறிப்பிட்டுள்ள வழக்கமான பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளை நாங்கள் மதிக்கிறோம், எனவே, மற்றவர்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது அவர்களும் அதையே கடைப்பிடிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம்

எங்கள் சேவை-சார்ந்த கூடுதல் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளில் அந்தச் சேவைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய எல்லோரும் பின்பற்ற வேண்டிய கூடுதல் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவர்கள் இந்த விதிகளைப் பின்பற்றாமலிருப்பதை நீங்கள் கண்டால் தவறான பயன்பாட்டைப் புகாரளிக்க எங்களின் பல்வேறு சேவைகளின் வழியாகவே புகாரளிக்க முடியும். தவறான பயன்பாடு தொடர்பான புகார் குறித்து நாங்கள் செயல்பட்டால், சிக்கல்கள் இருந்தால் நடவடிக்கை எடுத்தல் பிரிவில் அந்தச் செயல்முறையையும் விளக்குவோம்.

உங்கள் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கான அனுமதி

எங்கள் சேவைகளில் சில உங்கள் உள்ளடக்கத்தை நீங்கள் பதிவேற்ற, சமர்ப்பிக்க, சேமிக்க, அனுப்ப, பெற அல்லது பகிர உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எங்கள் சேவைகளுக்கு எந்தவித உள்ளடக்கதையும் நீங்கள் வழங்க வேண்டும் என்கிற கடமை உங்களுக்கு இல்லை, வழங்க விரும்பும் உள்ளடக்கத்தை நீங்களே தேர்வுசெய்துகொள்ளலாம். உள்ளடக்கத்தைப் பதிவேற்றுவதற்கோ பகிர்வதற்கோ நீங்கள் தேர்வுசெய்தால், அந்த உள்ளடக்கம் சட்டப்பூர்வமானது என்பதையும் உங்களிடம் அதற்கான உரிமைகள் இருப்பதையும் உறுதிசெய்துகொள்ளவும்.

உரிமம்

உங்கள் உள்ளடக்கம் உங்களுக்கே சொந்தமானது, அதாவது அந்த உள்ளடக்கத்தில் ஏதேனும் அறிவுசார் சொத்துரிமைகள் இருந்தால் அவை உங்களுடையதாகும். உதாரணத்திற்கு, நீங்கள் எழுதும் சீராய்வுகள் உட்பட நீங்கள் உருவாக்கும் கிரியேட்டிவ் உள்ளடக்கத்தில் உங்களுக்கு இருக்கும் அறிவுசார் சொத்துரிமைகள். அல்லது வேறொருவர் உங்களுக்கு அனுமதியளித்திருந்தால் அவரின் கிரியேட்டிவ் உள்ளடக்கத்தைப் பகிர்வதற்கான உரிமை உங்களிடம் இருக்கலாம்.

உங்கள் உள்ளடக்கத்தை நாங்கள் பயன்படுத்துவதை உங்கள் அறிவுசார் சொத்துரிமைகள் கட்டுப்படுத்துகிறது எனில் உங்கள் அனுமதி தேவைப்படும். இந்த உரிமத்தின் வாயிலாக Googleளுக்கு அந்த அனுமதியை வழங்குகிறீர்கள்.

இந்த உரிமம் கட்டுப்படுத்துபவை

ஓர் உள்ளடக்கம் அறிவுசார் சொத்துரிமைகளின் கீழ் பாதுகாக்கப்பட்டிருந்தால் இந்த உரிமம் உங்கள் உள்ளடக்கத்தைப் பாதுகாக்கிறது.

இந்த உரிமம் கட்டுப்படுத்தாதவை

  • இந்த உரிமம் உங்களது தனியுரிமை சார்ந்த உரிமைகளைப் பாதிக்காது — உங்களின் அறிவுசார் சொத்துரிமைகளைப் பற்றியது மட்டுமே
  • இந்த உரிமம் பின்வரும் வகை உள்ளடக்கங்களுக்கு அல்ல:
    • ஓர் உள்ளூர் வணிகத்தின் முகவரியில் திருத்தங்களைச் செய்வது போன்ற நீங்கள் வழங்கும் பொதுவில் கிடைக்கும் அசல் தகவல்கள். அவ்வாறான தகவல்களுக்கு உரிமம் தேவையில்லை ஏனெனில் அனைவரும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தடையற்ற பொதுவான ஒரு விஷயமாகும்.
    • எங்களது சேவைகளை மேம்படுத்துவதற்கான பின்னூட்டங்கள் உள்ளிட்ட நீங்கள் வழங்கும் ஆலோசனைகள் கீழே உள்ள சேவை தொடர்பான தகவல்தொடர்புகள் என்ற பிரிவில் கூறப்பட்டுள்ளது.

வரம்பு

இந்த உரிமம்:
  • உலகளவிலானது, அதாவது உலகில் எந்த இடத்திலும் செல்லுபடியாகக்கூடியது
  • பிரத்தியேகமல்லாதது, அதாவது உங்கள் உள்ளடக்கத்தை மற்றவர்களும் பயன்படுத்துமாறு நீங்கள் உரிமம் வழங்க முடியும்
  • ராயல்டி இல்லாதது, அதாவது உரிமத்திற்கு நிதிக் கட்டணங்கள் எதுவும் தேவையில்லை

உரிமைகள்

இந்த உரிமம் Google ஐ இவற்றுக்கு அனுமதிக்கிறது:

  • உங்கள் உள்ளடக்கத்தைப் ஹோஸ்ட் செய்தல், மறுஉருவாக்கம் செய்தல், விநியோகித்தல், தகவல் பரிமாற்றம் செய்தல், பயன்படுத்த அனுமதிக்கும் — உதாரணத்திற்கு, உங்கள் உள்ளடக்கத்தை எங்கள் சிஸ்டங்களில் சேமித்து அவற்றை எங்கிருந்தும் நீங்கள் பயன்படுத்த வழிவகை செய்தல்
  • உங்கள் உள்ளடக்கத்தை மற்றவர்கள் பார்க்கும் வகையில் அமைத்திருந்தால், அவற்றை வெளியிட, பொதுவில் வெளியிட அல்லது பொதுவில் காண்பிக்க அனுமதிக்கும்
  • உங்கள் உள்ளடக்கத்தில் மாற்றம் செய்யவோ அதனை அடிப்படையாகக் கொண்டு வருவிக்கப்பெற்ற படைப்பை உருவாக்கவோ அனுமதிக்கும் - மீண்டும் வடிவமைத்தல் அல்லது மொழிபெயர்த்தல் உள்ளிட்டவை இவற்றில் அடங்கும்
  • இந்த உரிமைகளை இவர்களுக்கு உள்-உரிமம் வழங்க அனுமதிக்கும்:
    • நீங்கள் வடிவமைத்த விதத்திற்கு ஏற்றவாறு, பிற பயனர்களுக்கு சேவைகள் செயல்பட வேண்டும் என்பதற்காக, நீங்கள் தேர்வுசெய்யும் நபர்களுடன் படங்களைப் பகிர அனுமதித்தல் போன்றவை
    • கீழே உள்ள நோக்கம் என்ற பிரிவில் விளக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நோக்கங்களுக்காக மட்டும் இந்த விதிமுறைகளுடன் தொடர்ச்சியாக இணங்கும் ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ள ஒப்பந்ததாரர்கள்

நோக்கம்

இந்த உரிமம் பின்வரும் குறிப்பிட்ட தேவைகளுக்கானதாகும்:

  • சேவைகளை இயக்குதலும் மேம்படுத்தலும், அதாவது வடிவமைப்பிற்கு ஏற்றவாறு சேவைகள் வேலைசெய்யுமாறு அனுமதித்தல், மேலும் புதிய அம்சங்களையும் செயல்பாடுகளையும் உருவாக்குதல். பின்வரும் தேவைகளுக்காக உங்கள் உள்ளடக்கத்தைப் பகுப்பாய்வு செய்ய தானியங்கு சிஸ்டங்கள் மற்றும் அல்காரிதங்களைப் பயன்படுத்துவதும் இதிலடங்கும்:
    • உள்ளடக்கத்தில் ஸ்பேம், மால்வேர், சட்டவிரோதமான உள்ளடக்கம் ஆகியவை உள்ளதா எனக் கண்டறிதல்
    • தொடர்புடைய படங்களை ஒன்றாக்கி Google Photosஸில் புதிய ஆல்பம் உருவாக்குமாறு எப்போது பரிந்துரைக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்தல் போன்ற தேவைகளுக்காக, தரவில் உள்ள பேட்டர்ன்களை அடையாளம் காணுதல்
    • பரிந்துரைகளை வழங்குதல், பிரத்தியேகமான தேடல் முடிவுகள், உள்ளடக்கம் மற்றும் விளம்பரங்கள் (விளம்பர அமைப்புகளில் இவற்றை உங்களால் மாற்றவோ முடக்கவோ முடியும்) போன்றவற்றுக்கு ஏற்றவாறு எங்கள் சேவைகளைப் பிரத்தியேகமாக்குதல்.
    இந்த ஆய்வானது, உங்கள் உள்ளடக்கம் அனுப்பப்படும்போது, பெறப்படும்போது அல்லது சேமிக்கப்படும்போது மேற்கொள்ளப்படும்.
  • சேவைகளை விளம்பரப்படுத்த நீங்கள் பொதுவில் பகிர்ந்த உள்ளடக்கத்தைப் பயன்படுத்துதல். உதாரணத்திற்கு, Google ஆப்ஸ் ஒன்றை விளம்பரப்படுத்த, அந்த ஆப்ஸ் தொடர்பாக நீங்கள் வழங்கிய சீராய்வை நாங்கள் மேற்கோள் காட்டக்கூடும். அல்லது Google Playயை விளம்பரப்படுத்த Play Storeரில் உள்ள உங்கள் ஆப்ஸின் ஸ்க்ரீன்ஷாட்டை நாங்கள் காட்டக்கூடும்.
  • இந்த விதிமுறைகளுடன் முரண்படாத வகையில் Googleளுக்காக புதிய தொழில்நுட்பங்களையும் சேவைகளையும் உருவாக்குதல்

கால அளவு

உங்கள் உள்ளடக்கம் அறிவுசார் சொத்துரிமைகள் மூலம் பாதுகாக்கப்படும் வரை இந்த உரிமம் நீடிக்கும்.

இந்த உரிமத்தின் கீழ் இருக்கும் உள்ளடக்கம் எதையாவது எங்கள் சேவைகளிலிருந்து நீங்கள் அகற்றினால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அவற்றைப் பொதுவில் காட்டுவதிலிருந்து எங்கள் சிஸ்டங்கள் நிறுத்திவிடும். இதற்கு இரண்டு விதிவிலக்குகள் உள்ளன:

  • உள்ளடக்கத்தை அகற்றுவதற்கு முன்னரே அதை மற்றவர்களுக்குப் பகிர்ந்திருந்தால். உதாரணத்திற்கு, உங்கள் நண்பருக்கு ஒரு படத்தைப் பகிர்கிறீர்கள் அவர் அதை நகலெடுக்கிறார் அல்லது மீண்டும் பகிர்கிறார் எனில் அந்தப் படம் உங்கள் Google கணக்கிலிருந்து அகற்றிய பிறகும் அவரின் Google கணக்கில் தொடர்ந்து இருக்கும்.
  • பிற நிறுவனங்களின் சேவைகள் மூலம் உங்கள் உள்ளடக்கம் கிடைக்குமாறு செய்தால், தேடல் முடிவுகளில் Google Search போன்ற தேடல் இன்ஜின்களும் உங்கள் உள்ளடக்கத்தைத் தொடர்ச்சியாகக் கண்டறிந்து காட்சிப்படுத்தும்.

Google சேவைகளைப் பயன்படுத்துதல்

உங்கள் Google கணக்கு

நீங்கள் இந்த வயது வரம்புக்கு உட்பட்டவர் எனில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப Google கணக்கை உருவாக்கலாம். சில சேவைகளைச் சரியாகப் பயன்படுத்த உங்களிடம் Google கணக்கு ஒன்று இருக்க வேண்டும் — உதாரணமாக, Gmailலைப் பயன்படுத்துவதற்கு Google கணக்கு ஒன்று இருக்க வேண்டும், இதன் மூலம் நீங்கள் மின்னஞ்சலை அனுப்பவும் பெறவும் முடியும்.

உங்கள் Google கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உட்பட உங்கள் Google கணக்கில் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் நீங்களே பொறுப்பு, மேலும் பாதுகாப்புச் சரிபார்ப்பை அடிக்கடி பயன்படுத்துமாறும் பரிந்துரைக்கிறோம்.

ஒரு நிறுவனத்தின் அல்லது வணிகத்தின் சார்பாக Google சேவைகளைப் பயன்படுத்துதல்

வணிகங்கள், லாப நோக்கற்ற நிறுவனங்கள், பள்ளிகள் போன்ற பல நிறுவனங்களும் எங்களுடைய சேவைகளைப் பயன்படுத்துகின்றன. ஒரு நிறுவனம் சார்பாக எங்களுடைய சேவைகளைப் பயன்படுத்துவதற்கு:
  • அந்த நிறுவனத்தின் சார்பாக அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவர் இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்
  • உங்கள் நிறுவனத்திற்கான நிர்வாகி Google கணக்கு ஒன்றை உங்களுக்கு ஒதுக்குவார். கூடுதல் விதிகளைப் பின்பற்றுமாறு அந்த நிர்வாகி உங்களைக் கேட்டுக்கொள்வார் மேலும் உங்களின் Google கணக்கை அணுகவோ முடக்கவோ அவரால் முடியும்.

சேவை சார்ந்த தகவல்தொடர்புகள்

எங்கள் சேவைகளை வழங்குவதற்காக, சேவை அறிவிப்புகளையும் மற்ற தகவல்களையும் சிலநேரங்களில் உங்களுக்கு அனுப்புவோம். நாங்கள் உங்களுடன் தொடர்புகொள்ளும் விதம் பற்றி மேலும் அறிய Googleளின் தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும்.

எங்கள் சேவைகளை மேம்படுத்துதல் பின்னூட்டங்கள் உள்ளிட்ட கருத்துகளை நீங்கள் எங்களுக்கு வழங்க விரும்பினால், அவற்றின் மீது நடவடிக்கை எடுப்போம், ஆனால் அதைச் செய்ய உங்களுக்குக் கடமைப்பட்டவர்களாக அல்ல.

Google சேவைகளில் உள்ள உள்ளடக்கம்

உங்கள் உள்ளடக்கம்

உங்கள் உள்ளடக்கத்தைப் பொதுவில் காட்டுவதற்கான வாய்ப்பை எங்களின் சில சேவைகள் உங்களுக்கு வழங்குகின்றன — உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு தயாரிப்பு பற்றியோ ரெஸ்டாரன்ட் பற்றியோ எழுதிய சீராய்வை இடுகையிடலாம் அல்லது நீங்கள் உருவாக்கிய வலைப்பதிவு இடுகையைப் பதிவேற்றலாம்.

உங்கள் அறிவுசார் சொத்துரிமைகளை யாராவது மீறுவதாக நீங்கள் கருதினால் அந்த மீறல் குறித்து எங்களுக்குத் தெரிவிக்கலாம், அதன் மீது தேவையான நடவடிக்கையை எடுப்போம். உதாரணத்திற்கு, எங்கள் பதிப்புரிமை உதவி மையத்தில் விளக்கியுள்ளவாறு தொடர்ச்சியாகப் பதிப்புரிமை மீறல்களில் ஈடுபடும் Google கணக்குகளை இடைநிறுத்துவோம் அல்லது மூடிவிடுவோம்.

Google உள்ளடக்கம்

எங்கள் சேவைகளில் சில Google க்கு சொந்தமான உள்ளடக்கத்தை உள்ளடக்கியது - எடுத்துக்காட்டாக, Google Mapsஸில் நீங்கள் காணும் பல காட்சி விளக்கப்படங்கள். இந்த விதிமுறைகள் மற்றும் எந்த சேவை-குறிப்பிட்ட கூடுதல் விதிமுறைகள் ஆகியவற்றால் அனுமதிக்கப்பட்டபடி நீங்கள் Google இன் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தலாம், ஆனால் எங்கள் உள்ளடக்கத்தில் உள்ள அறிவுசார் சொத்துரிமைகளை நாங்கள் வைத்திருக்கிறோம். எங்கள் பிராண்டிங், லோகோக்கள் அல்லது சட்ட அறிவிப்புகளை நீக்கவோ, மறைக்கவோ அல்லது மாற்றவோ வேண்டாம். எங்கள் பிராண்டிங் அல்லது லோகோக்களை நீங்கள் பயன்படுத்த விரும்பினால், தயவுசெய்து Google பிராண்ட் அனுமதிகள் பக்கத்தைப் பார்க்கவும்.

பிற உள்ளடக்கம்

இறுதியாக, எங்கள் சில சேவைகள் மற்றவர்களின் அல்லது வேறு நிறுவனங்களின் உள்ளடக்கத்தை அணுகுவதற்கான அனுமதியை உங்களுக்கு வழங்குகின்றன — உதாரணத்திற்கு, தனது வணிகத்தைப் பற்றி கடை உரிமையாளர் வழங்கிய விளக்கம், Google News இல் காட்டப்படும் ஒரு செய்தித்தாள் கட்டுரை போன்றவற்றை நீங்கள் அணுக முடியலாம். அந்த நபரின் அல்லது நிறுவனத்தின் அனுமதியில்லாமலோ சட்டத்தால் அனுமதிக்கப்படவில்லை என்றாலோ இந்த உள்ளடக்கத்தை நீங்கள் பயன்படுத்தக் கூடாது. மற்ற நபர்களின் அல்லது நிறுவனத்தின் உள்ளடக்கம் தொடர்பாகத் தெரிவிக்கப்படும் கருத்துகள் அவர்களின் சொந்த கருத்துகளாகும், இவை Googleளின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் என்ற கட்டாயமில்லை.

Google சேவைகளில் இருக்கும் மென்பொருள்

எங்கள் சேவைகளில் சில பதிவிறக்கக்கூடிய மென்பொருளைக் கொண்டிருக்கும். இந்தச் சேவைகளின் ஒரு பகுதியாக அந்த மென்பொருளைப் பயன்படுவதற்கான அனுமதியையும் வழங்குவோம்.

நாங்கள் உங்களுக்குக் கொடுக்கிற உரிமம்:
  • உலகளாவியதாகும், இதன் பொருள் இது உலகில் எங்கு வேண்டுமானாலும் செல்லுபடியாவதாகும்
  • உங்களுக்கு மட்டுமானதல்ல, இதன் பொருள், நாங்கள் இந்த மென்பொருளுக்கான உரிமத்தை மற்றவர்களுக்கும் கொடுக்கலாம்
  • உரிமைப்பங்கு இல்லாதது, இதன் பொருள், இந்த உரிமத்திற்கு நிதிக் கட்டணம் எதுவும் இல்லை
  • தனிப்பட்டது, இதன் பொருள் இது வேறு யாருக்கும் பொருந்துவதில்லை
  • கொடுக்கத்தக்கதல்ல, இதன் பொருள், இந்த உரிமத்தை வேறு யாருக்கும் கொடுக்க உங்களுக்கு அனுமதியில்லை

நாங்கள் வழங்கும் சில சேவைகளில், ஓப்பன் சோர்ஸ் உரிம விதிமுறைகளின் கீழ் உங்களுக்குக் கிடைக்கும் வகையில் வழங்கப்படும் மென்பொருள் உள்ளடங்கலாம். சிலசமயம் இந்த விதிமுறைகளில் சிலவற்றை ஓப்பன் சோர்ஸ் உரிமத்தில் உள்ள விதிமுறைகள் மீறிப் பொருந்தும் என்பதால், அந்த உரிமங்களைப் படித்து தெரிந்துகொள்வதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

எங்கள் சேவைகளின் ஏதாவது ஒரு பகுதியையோ மென்பொருளையோ நீங்கள் நகலெடுக்கவோ, திருத்தவோ, விநியோகிக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது குத்தகைக்கு விடவோ கூடாது

சிக்கல்களோ கருத்து வேறுபாடுகளோ இருந்தால்

உத்திரவாதத்திற்கான பொறுப்புதுறப்பு

Google Search, Maps போன்ற நம்பகத்தன்மையுள்ள சேவைகளை வழங்குவதன்மூலம் எங்களின் நற்பெயரை உருவாக்கியுள்ளோம், மேலும் உங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய எங்கள் சேவைகளைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். எனினும், சட்ட நோக்கங்களுக்காக, எங்கள் சேவை-சார்ந்த கூடுதல் விதிமுறைகளில் வெளிப்படையாகக் குறிப்பிட்டாலொழிய, எங்கள் சேவைகளை உத்திரவாதங்கள் இல்லாமலேயே வழங்குகிறோம். சட்டத்தின்படி இவற்றைக் குறிப்பிட்ட சட்டரீதியான மொழியில் விளக்க வேண்டியுள்ளது. எனவே, நீங்கள் இதைக் காண்பதை உறுதிசெய்ய, பின்வரும்படி இரு அடைப்புகுறிகளுக்குள் வழங்குகிறோம்:

”பொருந்தக்கூடிய சட்டங்களின்கீழ் அனுமதிக்கப்பட்ட அளவு எங்கள் சேவைகளை எந்த வெளிப்படையான அல்லது அனுமானிக்கப்பட்ட உத்திரவாதங்களின்றி “அப்படியே” வழங்குகிறோம். விற்பனைத் தரம், குறிப்பிட்ட நோக்கத்திற்கான பொருத்தம், மீறலில்லாமை ஆகியவற்றுக்கான அனுமானிக்கப்பட்ட உத்திரவாதங்களும் இதில் அடங்கும். உதாரணமாக, உள்ளடக்கம் அல்லது சேவைகளின் அம்சங்களைக் குறித்தும் அவற்றின் துல்லியத்தன்மை, நம்பகத்தன்மை, கிடைக்கும்தன்மை அல்லது உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் குறித்த எந்தவொரு உத்திரவாதங்களையும் நாங்கள் அளிப்பதில்லை.”

பொறுப்புகள்

அனைத்து பயனர்களுக்குமானவை

சட்டம், இந்த விதிமுறைகள் ஆகிய இரண்டுமே நீங்களோ Googleளோ ஒருவரிடமிருந்து ஒருவர் உரிமைகோருபவற்றுக்கு இடையே சமநிலையை உருவாக்க முயலுகின்றன. அதனால்தான் இந்த விதிமுறைகளின் கீழ் சில பொறுப்புகளை வரம்பிடவும் — பிறவற்றை வரம்பிடாமலிருக்கவும் — சட்டம் அனுமதிக்கிறது.

பொருந்தக்கூடிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளபடி மட்டுமே இந்த விதிமுறைகள் எங்கள் கடமைகளைக் கட்டுப்படுத்துகின்றன. ஒட்டுமொத்த அலட்சியம் அல்லது வேண்டுமென்றே தவறாக நடந்துகொள்வதற்கான பொறுப்பு இந்த விதிமுறைகளின் வரம்பின் கீழ் வராது.

பொருந்தக்கூடிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளபடி:
  • இந்த விதிமுறைகள் அல்லது பொருந்தக்கூடிய சேவை சார்ந்த கூடுதல் விதிமுறைகளின்மீறல்களுக்கு மட்டுமே Google பொறுப்பாகும்
  • இவற்றுக்கு Google பொறுப்பேற்காது:
    • லாபங்கள், வருவாய்கள், வணிக வாய்ப்புகள், நன்மதிப்பு, எதிர்பார்க்கப்படும் சேமிப்புகள் ஆகியவற்றில் ஏற்படும் இழப்பு
    • மறைமுக அல்லது விளைவு இழப்புகள்
    • இழப்பீட்டுத் தண்டனைகள்
  • இந்த விதிமுறைகளால் அல்லது இவை தொடர்பாக எழும் Googleளின் மொத்தப் பொறுப்புக்கு பின்வரும் இரண்டில் எது அதிகமோ அதுவே வரம்பாகும்: (1) $௨௦௦ அல்லது (2) வழக்குக்கு முன்பாக 12 மாதங்களில் சம்பந்தப்பட்ட சேவைகளைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் செலுத்திய கட்டணங்கள்

வணிகப் பயனர்களுக்கும் நிறுவனங்களுக்கும் மட்டும்

நீங்கள் ஒரு வணிகப் பயனராகவோ நிறுவனமாகவோ இருந்தால்:

  • சேவைகளைச் சட்டத்திற்கு எதிராகப் பயன்படுத்துவதாலோ அதன் காரணமாக வரக்கூடிய பிரச்சனைகளுக்கோ, இந்த விதிமுறைகளையோ சேவை சார்ந்த கூடுதல் விதிமுறைகளையோ மீறுவதாலோ ஏற்படும் மூன்றாம் தரப்பினருக்கான சட்ட நடவடிக்கைகளுக்கு (அரசு அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகளையும் சேர்த்து) Google மற்றும் அதன் இயக்குநர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்குப் பொருந்தக்கூடிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளபடி நஷ்ட ஈடு செலுத்துவீர்கள். உரிமைகோரல்கள், இழப்புகள், சேதங்கள், தீர்ப்புகள், அபராதங்கள், வழக்குச் செலவுகள், சட்டரீதியான கட்டணங்கள் போன்றவற்றிலிருந்து வரும் பொறுப்பும் செலவும் இந்த நஷ்ட ஈட்டில் அடங்கும்.
  • நஷ்ட ஈடு செலுத்துதல் உள்ளிட்ட குறிப்பிட்ட பொறுப்புகளிலிருந்து நீங்கள் சட்டரீதியாக விலக்கப்பட்டிருந்தால் இந்த விதிமுறைகளின் கீழ் அந்தப் பொறுப்புகள் உங்களுக்குப் பொருந்தாது. உதாரணத்திற்கு, சட்டப்பூர்வ கட்டாயங்களிலிருந்து ஐக்கிய நாடுகள் குறிப்பிட்ட சட்டவிலக்களிப்புகளைப் பெறுகிறது, இந்த விதிமுறைகள் அந்த சட்டவிலக்களிப்புகளை மீறிப் பொருந்தாது.

ஏதாவது சிக்கல்கள் இருந்தால் நடவடிக்கை எடுத்தல்

கீழே விளக்கப்பட்டுள்ளவாறு நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, இயன்றவரை முன்கூட்டியே அறிவித்துவிடுவோம், எங்கள் நடவடிக்கைக்கான காரணத்தையும் விளக்கிவிடுவோம், சிக்கலை சரிசெய்வதற்கான வாய்ப்பையும் உங்களுக்கு வழங்குவோம். பின்வருவன நிகழாத பட்சத்தில் இவ்வாறு செய்வோம்:

  • ஒரு பயனருக்கோ மூன்றாம் தரப்புக்கோ Googleளுக்கோ தீங்கு அல்லது பாதிப்பை ஏற்படுத்துதல்
  • சட்டத்தையோ சட்ட அமலாக்க ஆணையத்தின் உத்தரவையோ மீறுதல்
  • விசாரணையை சமரசம் செய்தல்
  • எங்கள் சேவைகளின் செயல்பாடு, ஒருங்கிணைவு அல்லது பாதுகாப்பை சமரசம் செய்தல்

உங்கள் உள்ளடக்கத்தை அகற்றுதல்

உங்கள் உள்ளடக்கத்தில் (1) இந்த விதிமுறைகளில் எவையேனும், சேவை தொடர்பான கூடுதல் விதிமுறைகளையோ கொள்கைகளையோ மீறுகின்றன, (2) பொருந்தக்கூடிய சட்டங்களை மீறுகின்றன அல்லது (3) எங்கள் பயனர்களுக்கோ மூன்றாம் தரப்பினருக்கோ Googleளுக்கோ பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றால், பொருந்தக்கூடிய சட்டங்களின் அடிப்படையில் உள்ளடக்கத்தில் சிலவற்றையோ முழுவதுமாகவோ நீக்குவதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது. சிறுவர்கள் இடம்பெற்றுள்ள ஆபாசப்படம், ஆட்கடத்தல் அல்லது மனிதர்களைத் துன்புறுத்துதல், பயங்கரவாதம், வேறொருவரின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறுவது போன்றவை தொடர்பான உள்ளடக்கம் ஆகியவை உதாரணங்களில் உள்ளடங்கும்.

Google சேவைகளுக்கான உங்கள் அணுகலை இடைநிறுத்துதல் அல்லது நிறுத்துதல்

இவற்றில் ஏதாவது நடந்தால் சேவைகளுக்கான உங்கள் அணுகலை இடைநிறுத்துவதற்கோ முடிப்பதற்கோ உங்கள் Google கணக்கை நீக்குவதற்கோ Googleளுக்கு உரிமை உள்ளது:

  • நீங்கள் பொருள்பட அல்லது திரும்பத் திரும்ப இந்த விதிமுறைகளை, சேவை சார்ந்த கூடுதல் விதிமுறைகள் அல்லது கொள்கைகளை விதிமீறுகிறீர்கள்
  • சட்டத் தேவைகளுக்கோ நீதிமன்ற உத்தரவிற்கு இணைங்குவதற்கோ நாங்கள் இதைச் செய்ய வேண்டியிருக்கும்
  • உங்கள் நடத்தை பயனருக்கோ மூன்றாம் தரப்புக்கோ Googleளுக்கோ தீங்கு அல்லது பாதிப்பை ஏற்படுத்துகிறது — உதாரணமாக, ஹேக் செய்தல், ஃபிஷிங், உபத்திரவம், ஸ்பேமிங், மற்றவர்களைத் தவறாக வழிநடத்துதல் அல்லது உங்களுக்கு சொந்தமில்லாத உள்ளடக்கத்தை நகலெடுத்தல்

நாங்கள் ஏன் கணக்குகளை முடக்குகிறோம், அவ்வாறு செய்தால் என்ன நடக்கும் என்பது குறித்து மேலும் அறிய உதவி மையப் பக்கத்தைப் பார்க்கலாம். உங்கள் Google கணக்கு பிழையாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவோ நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவோ கருதினால் நீங்கள் மேல்முறையீடு செய்யலாம்.

நிச்சயமாக, எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதை எந்த நேரத்திலும் நீங்கள் நிறுத்திக் கொள்ளலாம். ஒரு சேவையைப் பயன்படுத்துவதை நீங்கள் நிறுத்திவிட்டால் அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள நாங்கள் விரும்புவோம், இதன் மூலம் எங்களின் சேவைகளைத் தொடர்ந்து மேம்படுத்த முடியும்.

வழக்குகளைத் தீர்த்தல், ஆளுகைச் சட்டம், நீதிமன்றங்கள்

Google ஐத் தொடர்புகொள்வது பற்றிய தகவலுக்கு, எங்களது தொடர்புப் பக்கத்தைக் காண்க.

சட்ட விதிமுறைகளில் முரண்பாடு இருந்தாலும், இந்த விதிமுறைகள், சேவை சார்ந்த கூடுதல் விதிமுறைகள் அல்லது தொடர்புடைய ஏதேனும் சேவைகளில் அல்லது அவை தொடர்பாக எழும் வழக்குகள் அனைத்தையும் கலிஃபோர்னியா சட்டமே நிர்வகிக்கும். இந்த வழக்குகள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள சான்டா கிளாரா கவுண்டியின் ஃபெடரல் அல்லது மாநில நீதிமன்றங்களில் பிரத்தியேகமாக வழக்காடப்படும், இதற்கு நீங்களும் Googleளும் தரப்பு சார்ந்த சட்ட எல்லைக்கான சம்மதத்தை அளிக்கிறீர்கள்.

இந்த விதிமுறைகள் குறித்து ஓர் அறிமுகம்

சட்டப்படி, இதுபோன்ற சேவை விதிமுறைகள் ஒப்பந்தத்தின் மூலம் கட்டுப்படுத்த இயலாத சில உரிமைகள் உங்களுக்கு உள்ளன. இந்த விதிமுறைகள் எந்த வகையிலும் அந்த உரிமைகளைக் கட்டுப்படுத்தாது.

இந்த விதிமுறைகள் உங்களுக்கும் Google க்கும் இடையிலான உறவை விவரிக்கின்றன. இந்த விதிமுறைகளின் கீழ் மற்றவர்கள் அந்த உறவிலிருந்து பயனடைந்தாலும், அவர்கள் மற்றவர்களுக்காக அல்லது organizations க்கு எந்த சட்ட உரிமைகளையும் உருவாக்க மாட்டார்கள்.

இந்த விதிமுறைகளை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்க விரும்பினோம், எனவே எங்களின் சேவைகளில் இருந்து உதாரணங்களைப் பயன்படுத்தியுள்ளோம். ஆனால் இங்கே குறிப்பிட்டுள்ள அனைத்து சேவைகளும் உங்கள் நாட்டில் கிடைக்காமல் போகலாம்.

சேவை சார்ந்த கூடுதல் விதிமுறைகளுடன் இந்த விதிமுறைகள் முரண்பட்டால், அந்த சேவைகளைக் கூடுதல் விதிமுறைகளே நிர்வகிக்கும்.

குறிப்பிட்ட விதிமுறை தவறானது என்றாலோ அமலாக்க இயலவில்லை என்றாலோ மற்ற விதிமுறைகளை இது பாதிக்காது.

இந்த விதிமுறைகளையோ சேவை சார்ந்த விதிமுறைகளையோ நீங்கள் பின்பற்றாமல் போகும்பட்சத்தில், நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், எங்கள் (எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பது போன்ற) உரிமையை கைவிடுகிறோம் என்று பொருளல்ல.

(1) எங்கள் சேவைகளிலோ நாங்கள் வணிகம் செய்யும் விதத்திலோ ஏற்பட்ட மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையிலோ — உதாரணமாக புதிய சேவைகள், அம்சங்கள், தொழில்நுட்பங்கள், விலைகள் அல்லது பலன்களைச் சேர்க்கும்போது (அல்லது பழையவற்றை அகற்றும்போது) (2) சட்டம், ஒழுங்குமுறை, அல்லது பாதுகாப்புக் காரணங்களுக்காகவோ (3) தவறான பயன்பாடு அல்லது தீங்கு ஏற்படுவதலைத் தடுக்கவோ இந்த விதிமுறைகளையும் சேவை சார்ந்த கூடுதல் விதிமுறைகளையும் நாங்கள் மாற்றக்கூடும்.

நாங்கள் இந்த விதிமுறைகள் அல்லது சேவை சார்ந்த கூடுதல் விதிமுறைகளில்குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்யும்பட்சத்தில், 1) நாங்கள் புதிய சேவை அல்லது அம்சத்தைத் துவக்கும் போது, அல்லது (2) தொடர்ந்து நடந்து வருகிற துஷ்பிரயோகத்தைத் தவிர்த்தல் அல்லது சட்டப்பூர்வத் தேவைகளுக்குப் பதிலளித்தல் போன்ற அவசர சூழ்நிலைகளில் தவிர்த்து, நாங்கள் உங்களுக்கு நியாயமான அளவிற்கு முன் அறிவிப்பைக் கொடுத்து, அம்மாற்றங்களைப் பரிசீலிப்பதற்கான சந்தர்ப்பத்தையும் கொடுப்போம். இந்தப் புதிய விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில், நீங்கள் உங்களது உள்ளடக்கங்களை அகற்றி விட்டு, இச்சேவைகளை உபயோகிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் உங்களது Google கணக்கை முடித்துக்கொள்வதன் மூலமாக, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எங்களோடுள்ள உங்களது உறவையும் முடித்துக் கொள்ளலாம்.

விளக்கங்கள்

அறிவுசார் சொத்துரிமைகள் (IP உரிமைகள்)

புதிய கண்டுபிடிப்புகள் (காப்புரிமைகள்); இலக்கியம் மற்றும் கலைப் படைப்புகள் (பதிப்புரிமை); வடிவமைப்புகள் (வடிவமைப்பு உரிமைகள்); வணிகத்தில் பயன்படுத்தியுள்ள குறியீடுகள், பெயர்கள், படங்கள் (வர்த்தகமுத்திரைகள்) போன்ற ஒரு நபரின் சிந்தனையில் தோன்றுபவைக்கான உரிமைகள். இந்த அறிவுசார் சொத்துரிமைகள் உங்களுக்கோ வேறு நபருக்கோ ஒரு நிறுவனத்திற்கோ சொந்தமானவையாக இருக்கலாம்.

இணை நிறுவனம்

Google குழும நிறுவனங்களைச் சார்ந்த ஒரு நிறுவனம், அதாவது Google LLC மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் வாடிக்கையாளர் சேவையை வழங்கும் பின்வரும் நிறுவனங்கள் உள்ளிட்ட அதன் துணை நிறுவனங்களில் ஒன்று: Google Ireland Limited, Google Commerce Limited, Google Dialer Inc.

உங்கள் உள்ளடக்கம்

எங்கள் சேவைகளைப் பயன்படுத்தி நீங்கள் உருவாக்குபவை, பதிவேற்றுபவை, சமர்ப்பிப்பவை, சேமிப்பவை, அனுப்புபவை, பெறுபவை அல்லது பகிர்பவை 'உங்கள் உள்ளடக்கம்' எனக் கருதப்படும். எங்கள் சேவைகளுக்கு எடுத்துக்காட்டுகள்:

  • நீங்கள் உருவாக்கும் Docs, Sheets & Slides
  • Blogger மூலம் நீங்கள் பதிவேற்றும் வலைப்பதிவு இடுகைகள்
  • Maps மூலம் நீங்கள் சமர்ப்பிக்கும் கருத்துகள்
  • Driveவில் நீங்கள் சேமிக்கும் வீடியோக்கள்
  • Gmailலைப் பயன்படுத்தி நீங்கள் அனுப்பும் பெறும் மின்னஞ்சல்கள்
  • Photos மூலம் உங்கள் நண்பர்களுடன் நீங்கள் பகிரும் படங்கள்
  • Googleளில் நீங்கள் பகிரும் பயணத் திட்டங்கள்

உத்திரவாதம்

ஒரு தயாரிப்போ சேவையோ குறிப்பிட்ட தரநிலைக்கு ஏற்ப செயல்படும் என்பதற்கான உத்தரவாதம்.

சேவைகள்

https://policies.google.com/terms/service-specific எனும் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த விதிமுறைகளுக்கு உட்படும் தயாரிப்புகளும் சேவைகளுமே Google சேவைகளாகும், இவற்றில் அடங்குபவை:

  • ஆப்ஸ் மற்றும் தளங்கள் (Search, Maps போன்றவை)
  • பிளாட்ஃபார்ம்கள் (Google Shopping போன்றவை)
  • ஒருங்கிணைக்கப்பட்ட சேவைகள் (வேறு நிறுவனங்களின் ஆப்ஸிலோ தளங்களிலோ உட்பொதிந்துள்ள Maps போன்றவை)
  • சாதனங்கள் மற்றும் பிற பொருட்கள் (Google Nest போன்றவை)

இந்தச் சேவைகள் பலவற்றில் நீங்கள் ஸ்ட்ரீம் செய்யக்கூடிய அல்லது பயன்படுத்தக்கூடிய உள்ளடக்கமும் இருக்கும்.

நஷ்ட ஈடு அல்லது ஈட்டுறுதி

வழக்குகள் போன்ற சட்டப்பூர்வ நடவடிக்கைகளின் காரணமாக தனிநபர் அல்லது நிறுவனத்தால் மற்றொரு தனிநபர் அல்லது நிறுவனத்திற்கு ஏற்படும் நஷ்டங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தக் கடமை.

நாடு சார்ந்த பதிப்பு

உங்களிடம் Google கணக்கு இருக்கும்பட்சத்தில் இவற்றைத் தீர்மானிப்பதற்காக அதனை ஒரு நாட்டுடன் (அல்லது பிராந்தியத்துடன்) இணைக்கிறோம்:

  • உங்களுக்கு சேவைகளை வழங்கும் மற்றும் அந்த சேவைகளைப் பயன்படுத்தும்போது உங்கள் தகவலை செயல்படுத்தும் Google இணை நிறுவனம்
  • நமக்கிடையேயான உறவை நிர்வகிக்கும் விதிமுறைகளின் பதிப்பு

வெளியேறி இருக்கும்போது நீங்கள் Google சேவைகளைப் பயன்படுத்திய இருப்பிடத்தின் அடிப்படையில் நாடு சார்ந்த பதிப்பு தீர்மானிக்கப்படும். உங்களிடம் கணக்கு இருந்தால் உள்நுழைந்து இந்த விதிமுறைகளைப் பார்த்து அதனுடன் இணைக்கப்பட்ட நாட்டைக் காணலாம்.

நிறுவனம்

சட்டரீதியிலான ஒரு நிறுவனம் (நிறுவனம், லாப நோக்கமற்ற நிறுவனம் அல்லது பள்ளி) - தனிநபர் அல்ல.

நுகர்வோர்

வணிகம், வர்த்தகம், தொழில் அல்லது வாழ்க்கைத்தொழிலுக்காக இல்லாமல், தனிப்பட்ட முறையிலும் வர்த்தக நோக்கமற்ற முறையிலும் Google சேவைகளைப் பயன்படுத்தும் தனிநபர். (வணிகப் பயனரைக் பார்க்கவும்)

பணியின் அசலை உருவாகியவர் (வலைப்பதிவு இடுகை, படம் அல்லது வீடியோ போன்றவை), மற்றவர்கள் எப்படி அதனைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானித்து அனுமதிப்பதற்கான சட்டப்பூர்வ உரிமையானது, சில வரம்புகளுக்கும் விதிவிலக்குகளுக்கும் (“நியாயமான பயன்பாடு”, “நியாயமாகக் கையாளுதல்” போன்றவை) உட்பட்டது.

பொறுப்பு

எந்த வகையான சட்டப்பூர்வ உரிமைகோரல் மூலமும் ஏற்படும் இழப்புகள், இந்த உரிமைகோரல் ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டதானாலும், பொல்லாங்குக் குற்றமானாலும் (அலட்சியத்தால் ஏற்படுவதையும் சேர்த்து) அல்லது வேறு காரணமாக இருந்தாலும் மேலும் அந்த இழப்புகள் எதிர்பார்க்கப்படுவது அல்லது முன்கணித்தவையாக இருந்தாலும் இல்லையென்றாலும்.

பொறுப்புதுறப்பு

ஒருவரின் சட்டப்பூர்வ பொறுப்புகளை வரம்பிலடக்கும் ஓர் அறிக்கை.

வணிகப் பயனர்

நுகர்வோரல்லாத ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் (வாடிக்கையாளர் என்பதைப் பார்க்கவும்).

வர்த்தகமுத்திரை

வணிகத்தில் பயன்படுத்தப்படும் சின்னங்கள், பெயர்கள், படங்கள் ஆகியவை தனிநபர் அல்லது வெவ்வேறு நிறுவனங்களின் சரக்குகளையோ சேவைகளையோ மற்றொன்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் வகையில் இருக்க வேண்டும்.

Google ஆப்ஸ்
முதன்மை மெனு