கொட்டும் திற்பரப்பு அருவி; பயணிகள் மகிழ்ச்சி

த.ராம்
அரசியல்

குமரி மாவட்ட அணைகளில் தற்போது பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கோதையாற்றில்  தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும்  திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அருவியில் ஆனந்த குளியல் போட  சுற்றுலாப் பயணிகள் அதிகம் குவிந்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் கோதையாறு, திற்பரப்பு பகுதியில் அருவியாக விழுந்து செல்கிறது. குறிப்பிட்ட சீசனாக இல்லாமல் எப்போதும் தண்ணீர் கொட்டும் திற்பரப்பில், கோதையாற்றில் ஏராளமான குடிநீர் திட்டங்கள் செயல்படுத்துவதால் தண்ணீர் குறைந்து விட்டது. குறிப்பாக மழை இல்லாத காலத்தில் திற்பரப்பு அருவி தண்ணீர் இல்லாமல் வறண்டு விடுகிறது.

குமரியில் பருவமழை பொய்த்துவிட்டதால் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் இல்லாமல் கோதையாறு வறண்ட  பாறையாக காட்சியளித்தது.  இந்த நிலையில், கடந்த சில தினங்களாக மலையோரப் பகுதிகளில் பெய்யும் கோடை மழை, அடிக்கடி கனமழையாக கொட்டி வருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளது.
குமரி மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலமாக திற்பரப்பு அமைந்துள்ளது. இப்பகுதி நீர்வீழ்ச்சி மற்றும் இயற்கை அழகை ரசிக்க தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர். கோதையாறு சிற்றாறுடன் இணைந்து அருவியாகப் பாய்ந்து செல்கிறது. அருவியின் மேற்பகுதியில் 1948-ம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக் காலத்தில் விவசாய தேவைக்காக தடுப்பணை அமைத்து இரு கால்வாய்களும் அமைத்துள்ளனர். செக்டேம் கட்டப்பட்டுள்ளதால் மேற் பகுதியில் இரண்டு கி.மீ தூரம் தண்ணீர் தேங்கி நிற்கிறது. திற்பரப்பு அருவியிலும் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. பல வாராங்களாக வறண்டு கிடந்த திற்பரப்பு அருவியில் தற்போது தண்ணீர் கொட்டுவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.