குஜராத் முதல் ஒடிஸா வரை... துறைமுகங்களை இணைக்கும் சாகர்மாலா திட்டம் என்பது என்ன?

துரை.நாகராஜன்
அரசியல்

அது எல்லா வளங்களும் நிறைந்த அழகிய விவசாய கிராமம். அந்தக் கிராமத்தின் எல்லையில் ஒரு தொழிற்சாலை அமைய இருக்கிறது. அதற்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறது. நிலம் கையகப்படுத்துதலில் அதிகாரத்தைப் பயன்படுத்தி வாங்குவது, இரண்டாவது நிலையை எடுத்துச் சொல்லி விவசாயிகளுக்கு ஆசைவார்த்தை காட்டி (உங்களுக்கு வேலைத் தருகிறேன் என்பது உட்பட) நிலங்களை வாங்குவது என இரண்டு வகை உண்டு. விவசாயிகளும் ஆசை வார்த்தைகளுக்கு இணங்கி எழுதிக் கொடுத்து விடுகிறார்கள். விவசாயிகளுக்கு அதிகாரிகள் சொன்னபடி தொழிற்சாலையில் வேலைக் கிடைக்கிறது என்றே வைத்துக் கொள்வோம்... இப்போது அவனுக்குத் தொழிற்சாலையில் 10,000 சம்பளம் கொடுக்கப்படுகிறது. சரியான சாலை வசதி இல்லாத ஊருக்கு புதிய அகலமான சாலை போடப்படுகிறது. வாகன வசதிகளே இல்லாத ஊருக்கு வாகனங்களும் பேருந்து வசதியும் செய்யப்படுகிறது. ஊரில் கடைகளும், காம்ப்ளக்ஸ்களும் பெருக ஆரம்பிக்கின்றன. இது எல்லாமே வளர்ச்சியின் அடுத்த கட்டம்தான் என்பது மறுக்க முடியாது. ஆனால், இதற்கு முன்னர் 10 பேருக்குச் சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்தவன், 10 ஆயிரத்துக்காகக் கையேந்துகிறான். தொழிற்சாலை வேலைக்கு ஆட்கள் வேலைக்கு போவதால் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். புதிதாக அமையும் தொழிற்சாலையின் தண்ணீர்த் தேவையால் விவசாய நிலங்களும் பாதிக்கப்படும். தொழிற்சாலை வளர்ச்சிக்கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டே இருக்கும். கிராமமானது விவசாயம் பொய்த்துப்போய் வீழ்ச்சியைச் சந்திக்கும். இதற்காகத் தொழிற்சாலை வேண்டாம் என்று சொல்லவில்லை. இதில் கேள்வியே தொழிற்சாலையை அமைக்க அதிகமான இடங்கள் இருந்த போதும் வளமான கிராமத்தில் ஏன் நிறுவ வேண்டும் என்பதுதான்... மேற்கண்ட செயலைத்தான் ஒவ்வொரு வளர்ச்சித் திட்டங்களிலும் அரசு முன்னெடுத்துக் கொண்டே இருக்கிறது. பல இடங்களில் சுற்றுச்சூழல் கேடுகளை விளைவிக்கக் கூடிய திட்டங்களை அரங்கேற்றியிருக்கிறது, மத்திய அரசு. இதன் தொடர்ச்சியாக  இன்னொரு புதிய திட்டம் செயல்படுத்துவதற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளது மத்திய அரசு. அதுதான் சாகர்மாலா திட்டம்...

2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 'சாகர்மாலா' எனும் திட்டம் தற்போது மத்திய அரசால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாகர்மாலா திட்டம் என்பது துறைமுக மேம்பாட்டுத் திட்டம். தொலைநோக்கு திட்டங்களின் அடிப்படையில் துறைமுகங்களை இணைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் சர்வதேச வர்த்தகத்துக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். துறைமுக மேம்பாடு தவிர, துறைமுகத்தோடு இரயில் பாதை இணைப்பு, விமான போக்குவரத்து, நீர்வழி இணைப்பு ஆகியவை உருவாக்கப்படும். இதில் குளிர்பதனக் கிடங்குகளும், பொருட்கள் சேமிக்கும் கிடங்குகளும் அடக்கம். இந்தத் திட்டத்தின் மதிப்பு 70 ஆயிரம் கோடி. குஜராத் முதல் ஒரிசா வரை உள்ள கடற்கரைகளில் செயல்படுத்தப்போகும் திட்டம்தான், சாகர்மாலா. இதன் மூலம் பழைய துறைமுகங்கள் சீரமைக்கப்பட்டு, புதிதாக சில துறைமுகங்கள் நிறுவப்படும். தமிழ்நாட்டுக் கடலோர எல்லையில் இணையத்திலும், சீர்காழியில் தொழிற்சாலை பூங்காக்களும் நிறுவப்படும் என சாகர்மாலா திட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகத்தான் கடலோர மாநிலங்களில் இருந்து மீனவ சமுதாய பேரவையின் முக்கிய தலைவர்கள், பொறுப்பாளர்கள், துறைமுக எதிர்ப்பாளர்கள் எனப் பலர் தலமை தாங்க சாகர்மாலா திட்டத்தை எதிர்த்து நீரோடி முதல் சென்னை வரை பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி கடந்த ஜூலை 10-ம் தேதி தொடங்கி, ஜூலை 27-ம் தேதியான இன்று சென்னை சேப்பாக்கத்தை வந்தடைந்தது.

இந்தப் பேரணிக்கு தலைமை வகித்த மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இணையம் துறைமுகத் திட்ட எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், " சாகர் மாலா திட்டம், மக்களின் வாழ்வாதாரத்துக்குப் பாதுகாப்பு இல்லாத திட்டம். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்படும். இந்தியா முழுவதும் உள்ள 13 துறைமுகங்களை புதுப்பிக்கப் போகிறார்கள். அதைச் செய்து கொள்ளட்டும். அதி விட்டுவிட்டு புதிதாக தமிழ்நாட்டில் இரண்டு துறைமுகங்களை அமைக்கப் போகிறார்கள். அதில் இணையம் துறைமுகம் திட்டமும் ஒன்று. இணையம் துறைமுகத்தால் பல ஆயிரக்கணக்கான நிலங்கள் கையகப்படுத்தப் படும். கடல் ஆக்கிரமிக்கப்படும், மீனவர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படும். மேலும், இணையம் பகுதியில்தான் தமிழக அரசு ஆமை தனது இனப்பெருக்க காலத்தில் அதிக முட்டையிடும் இடமாகவும் விளங்குகிறது. அந்த இடத்தில்தான் தற்போது இணையம் துறைமுகம் அமையப் போகிறது. இதுதவிர, பக்கத்தில் இருக்கும் அதிகமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு தொழிற்மேம்பாட்டு பூங்காக்கள் அமைக்கப்படும். இரயில் நிலையங்கள் அதற்குப் பாதைகள் என அனைத்தையும் அங்கு நிறுவினால் இணையம் பகுதி போதாது. இதேபோல கடற்கரை முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றால் அது நினைத்ததைச் செய்யும். ஆனால் விவசாயம், மீனவ சமுதாயம் எனப் பலவும் வீழ்ச்சியைச் சந்திக்கும்" என்றார்.

உண்மையாக ஒரு வளர்ச்சித் திட்டமாக இருந்தால் நாட்டு மக்களுக்கும் பயனளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு அப்படி நடக்கவில்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. சாகர்மாலா திட்டத்தை 2015-ம் ஆண்டு தொடங்கி முதல் செயற்குழு கூடிய போது தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்டது யார் தெரியுமா?... அப்போதைய சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிதான். அவர்தான் இப்போதைய தமிழக முதல்வர்... எப்படியும் மத்திய அரசு செயல்படுத்தி விடும் என்பது மட்டும் தெரிகிறது.