சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற புதுச்சேரி எம்.எல்.ஏ தகுதிநீக்கம்!

ஜெ.முருகன்
அரசியல்

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் தண்டனை பெற்ற எம்.எல்.ஏவை தகுதி நீக்கம் செய்து புதுச்சேரி சட்டப்பேரவை அதிரடியாக அறிவித்திருக்கிறது.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியின் என்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ அசோக் ஆனந்த். இவரின் தந்தை ஆனந்தன் 2007-08 ஆண்டுகளில் புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளராக பணியாற்றிவர். இவர்களுக்குச் சொந்தமாக தனியார் பள்ளி ஒன்று இருக்கிறது. ஆனந்தன் பதவி வகித்த காலத்தில் வருமானத்துக்கு அதிமாக சொத்துகளை குவித்ததாக சி.பி.ஐ-க்கு புகார் சென்றது. அதனடிப்படையில் ஆனந்தன் மற்றும் அவரது மகன் அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ இருவரிடமும் சி.பி.ஐ நடத்திய விசாரணையில், அந்தப் புகாரில் முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து ஆனந்தன், எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் ஆகியோர் வழக்கு பதிவு செய்தது சி.பி.ஐ. இந்த வழக்கின்  விசாரணை புதுச்சேரி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை கடந்த அக்டோபர் 30-ம் தேதி முடிவடைந்த நிலையில் அன்றே தீர்ப்பு வழங்கப்பட்டது.

எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்த தலைமை நீதிபதி தனபால், இருவருக்கும் தலா ஓர் ஆண்டு சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் 3 மாதம் கடுங்காவல் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்பதோடு அவர்களிடம் இருந்து 1.74 கோடி ரூபாய் சொத்துகளையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டிருந்தார். அதேபோல், அவர் 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் எம்.எல்.ஏ ஒருவருக்கு சிறைத் தண்டனை விதித்து வழங்கப்பட்ட தீர்ப்பு புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவைச் செயலகம் இன்று வெளியிட்டுள்ள உத்தரவில், ``எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் வழக்கில் ஓர் ஆண்டு சிறைத் தண்டனையுடன், வருமானத்துக்கு அதிகமாகச் சேர்க்கப்பட்ட ரூ.1.74 கோடியைப் பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சொத்துக் குவிப்புவழக்கில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓர் ஆண்டு தண்டனை பெற்றதால் அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அதன்காரணமாக தீர்ப்பு வழங்கப்பட்ட கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி முதல் தட்டாஞ்சாவடி தொகுதி காலியாக இருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.