`சிறையை சொர்க்கபுரியாக மாற்ற யார் அனுமதி கொடுத்தது?’ - பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

இ.கார்த்திகேயன்
அரசியல்

`எந்த மாநிலத்துக்கு சிறைச்சாலையை சொர்க்கபுரியாக மாற்ற அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. சிறைக்கு வெளியே இருக்கும் மக்களுக்கு நரகம். சிறைக்குள் உள்ளவர்களுக்கு சொர்க்கம் என்ற சட்டம் எந்த நாட்டில் உள்ளது" என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விஸ்வகர்மா ஜயந்தி விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், `சென்னையில் பெரியார் சிலையை ஜெகதீசன் என்பவர் அவமதித்ததாகச் செய்தியைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். அவர் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இவர்கள் யார். இவர்களை யார் தூண்டிவிடுகின்றனர். இதனுடைய பின்னணி என்ன என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இது ஏற்புடையது அல்ல. கொள்கை ரீதியாக ஒவ்வோர் இயக்கத்துக்கும் ஆயிரம் வேறுபாடுகள் இருக்கலாம். பெரியார் என்றவுடன் யாரும் வேறு நோக்கத்துடன் பார்க்கக் கூடாது.

புழல் சிறையில் நடந்த சம்பவங்கள் குறித்து புகைப்படங்கள் வெளிவந்துவிட்டன. 5 நட்சத்திர விடுதிகளில் இருப்பதைவிட கைதிகள் அங்கு மிகவும் கொகுசாக இருக்கின்றனர். அதைத் தற்போது இல்லை என்று சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இதில் தவறு நடந்திருப்பது தெளிவாகிறது. 5 நட்சத்திர விடுதிகளில் விளையாடுபவர்கள் எப்படி ஆடை அணிந்திருப்பார்களோ, அதேபோல் ஆடை அணிந்துள்ளனர். அந்த அறை ஏசி அறை போன்று உள்ளது. இந்தளவுக்கு ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள் என்றால் சிறைத்துறை மிகப்பெரிய குற்றத்தைச் செய்துள்ளது.

அந்தத் தவற்றை செய்த அதிகாரிகள் யார் எனக் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது தயக்கமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். புழல் சிறையில் நடந்த  விஷயங்கள் குறித்து கேட்டால், மாநில அரசின் உரிமைகளை பறிப்பதாக அர்த்தமா? எந்த மாநிலத்துக்கு சிறைச்சாலையைச் சொர்க்கபுரியாக மாற்ற அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. சிறைக்கு வெளியே இருக்கும் மக்களுக்கு நரகம். சிறைக்குள் உள்ளவர்களுக்கு சொர்க்கம் என்ற சட்டம் எந்த நாட்டில் உள்ளது.

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து பல்வேறு கட்சிகள் அரசியல் நடத்துகின்றனர். எது நியாயமோ அது நடக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் என்ன முடிவெடுக்கிறார் என்று பார்ப்போம். ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனத் திருமாவளவன் கூறியது குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. திருமாவளவன் போன்றவர்கள் இதற்கு முன்பெல்லாம் பயன்படுத்திய வார்த்தைகள் எல்லாம் தற்போது தாங்கள் பயன்படுத்தவில்லை எனக் கூறியுள்ளனர். அவற்றையெல்லாம் திரும்பிப் பார்த்து, இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும்” என்றார்.