விவசாயம் செய்ய தண்ணீர்க் கேட்டு சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு!

பாலமுருகன். தெ
அரசியல்

அணைக்கட்டில் இருந்து பிரிந்து வரும் தண்ணீரை இளந்தக்கரை கிராம மக்கள் தற்காலிக மண்தடுப்பு மூலம் மற்ற கண்மாய்களுக்கு போகவிடாமல் தடுத்திருக்கிறார்கள், அதை உடனே அகற்ற வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்கள் சாக்கூர் கிராம மக்கள்.

இது சம்பந்தமாக சாக்கூர் கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் கூறுகையில், ``சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகில் உள்ளது ஏரிவயல் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்டு சாக்கூர், அஞ்சவயல், கொத்தமங்களம், கிராம்புளி, சிங்கானி, பழிசேரி போன்ற கிராமங்கள் இருக்கின்றன. இந்தப் பகுதி மக்களின் விவசாயத்துக்கு சருகணி கோட்டம், நாட்டார்காலில் தவளி மண்டபத்தில்  அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டிலிருந்து மூன்று பொதுப்பணித்துறை கண்மாய், இரண்டு யூனியன் கண்மாய் ஆகியவற்றுக்கு தண்ணிர் பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தது. இந்த அணைக்கட்டிலிருந்து முதல் கண்மாயாக இளந்தக்கரை கண்மாய் இருப்பதால் அந்த ஊர் மக்கள் மற்ற ஊர்களுக்குச் செல்லும் தண்ணீரை கண்மாய்க்குள் செல்ல விடாமல் குறுக்கே மண்தடுப்பு போட்டு தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.

கடந்த நான்கு ஆண்டு வறட்சியாக இருந்ததால் விவசாயம் எதுவும் நடைபெறவில்லை. தற்போது காவேரி, முல்லைப் பெரியார் மற்றும் வைகை அணைகளில் தண்ணீர் நிரம்பியதால் பாசனக்கால்வாய்களில் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தின் கடைசி கண்மாய் சாக்கூர் கண்மாய். தண்ணீர் வராவிட்டாலும் பாதிப்பு, மழைக்காலங்களில் கண்மாய் நிறைந்து மாறுகால் வாங்கினாலும் பாதிப்பு. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நாங்கள் இருக்கிறோம்” என்கிறார்.