மாதிரி கிராம சபைக் கூட்டங்களை கமல்ஹாசன் நடத்த வலியுறுத்துவது ஏன்?

துரை.வேம்பையன்
அரசியல்

ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தினங்களில் அனைத்துக் கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இந்தக் கூட்டத்துக்கு வலிமைமிக்க அதிகாரம் இருப்பதால்தான் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்ய அமைப்பு, மாதிரி கிராம சபைக் கூட்டங்கள் நடத்தி அதுபற்றிய விழிப்புஉணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது. அப்படிப்பட்ட கிராம சபைக் கூட்டத்தில் எடுக்கப்படும் அதிகாரங்கள் எத்தகையது என்பதை இங்கே பார்ப்போம்....

கிராம சபையின் அதிகாரம் குறித்து இந்திய தேசியக் காங்கிரஸ் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் நிர்வாகி தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். ``வானளாவிய அதிகாரம்கொண்ட கிராம சபைக் கூட்டம் பற்றிப் பொதுவாக மக்களுக்குத் தெரிவதில்லை. சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தீர்மானங்களுக்கு இணையான அதிகாரம் கிராம சபைத் தீர்மானத்துக்கு உண்டு. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்குட்பட்ட தீர்மானங்களைக் கொண்ட எந்தவொரு கிராம சபை தீர்மானமும் எல்லா நீதிமன்றங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படும்.  கிராமத்துக்குச் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விசயத்துக்காகவும், தேவைக்காகவும் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றலாம். குறிப்பாக, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்குட்பட்டதாகக் கிராம சபையின் தீர்மானம் இருக்க வேண்டும். இந்தக் கிராம சபையில் மக்களின் கோரிக்கையைப் பஞ்சாயத்துத் தலைவரோ, அதிகாரிகளோ நிராகரிக்க முடியாது. கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைச் சரி அல்லது தவறு என முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. 

இந்தக் கூட்டத்தில், `இத்தனை தீர்மானங்கள்தான் நிறைவேற்ற வேண்டும்' என்ற வரையறை எதுவும் இல்லை. அதேநேரத்தில், எண்ணிக்கை வரம்பு இல்லை என்ற காரணத்தால், எண்ணற்ற தீர்மானங்களை நிறைவேற்றுவதால் எந்தப் பயனுமில்லை. கிராம சபை தீர்மானம் ஒருபோதும் காலாவதி ஆகாது. ஆனால், ஒருமுறை சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, சூழலின் தன்மை கருதி விவாதித்து (மறுபரிசீலனை செய்தோ, மாற்றம் செய்தோ அல்லது மறுத்தோ) வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், முந்தைய தீர்மானம் செயல் இழக்கக் கூடும். கிராம இளைஞர்கள், தன்னார்வலர்கள் முயற்சி எடுத்து, அரசு அதிகாரிகள் மற்றும் தலைவர் உட்பட பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு நினைவூட்டல் அனுப்பி, தொடர்ந்து கண்காணிப்பதன்மூலம் கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்தலாம். கிராம வளர்ச்சிக்காக விவாதிப்பதும், மக்களின் சந்தேகங்களுக்கு முறையாகப் பதில் அளிப்பதும் கிராம

 சபையின் முக்கிய நோக்கமாக இருக்கும். 

கிராம சபையில் இயல்பான வாக்கியங்களைக்கொண்டே தீர்மானம் நிறைவேற்றலாம். இந்த வடிவில்தான் இருக்கவேண்டும் என எந்த நிபந்தனையும் இல்லை. கிராம சபை தீர்மானத்தின் நகலைக் கிராம மக்கள் நிச்சயம் பெறமுடியும். அதற்குக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. இப்படி அதிகாரமிக்கக் கிராம சபைக் கூட்டங்களில், கிராமங்களில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். குறிப்பாக, ஒரு கிராமப் பஞ்சாயத்தின் மக்கள்தொகை 500 பேர் என்றால், அதில் குறைந்தபட்சம் 50 பேராவது கலந்துகொள்ள வேண்டும். அதேநேரத்தில், அரசாணையில் குறிப்பிட்டுள்ள குறைவெண் வரம்பு இல்லாதபோது, கிராம சபைக் கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும். கிராமப் பஞ்சாயத்தின் வாக்காளர்கள் அனைவரும் கிராம சபையின் உறுப்பினர்கள் என்பதால், அவர்கள் அனைவரும் கிராம சபையில் கலந்துகொள்ள உரிமையுடையவர்கள். ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நாள்களில் கிராம சபை கட்டாயம் நடைபெறும். ஆனால், இந்த நாள்களில் நடைபெறும் கிராம சபைகளையும் தாண்டி கூடுதலாகக் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மக்கள் நினைத்தால், கிராம சபை கூட்டத்தை நடத்தலாம். அவ்வாறு கூட்டப்படும் கிராம சபை, சிறப்புக் கிராம சபை என்று அழைக்கப்படும்'' என்றார், மிகத் தெளிவாக.

கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்பது ஒவ்வொரு வாக்காளர்களின் கடமையாகும்.