அதிமுக சார்பில் பிரமாண்ட சைக்கிள் பேரணி - முதல்வர் தொடங்கி வைத்தார்!

செ.சல்மான் பாரிஸ்
அரசியல்

அதிமுக அரசின் சாதனையை கிராமங்களில் பிரச்சாரம் செய்யும் மாபெரும் சைக்கிள் பிரச்சாரத்தை மதுரையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

விருதுநகரில் இன்று நடந்த காமராஜர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர், மாலை மதுரை பாண்டி கோயில் திடலில் ஜெயலலிதா பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சைக்கிள் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். எடப்பாடி பழனிச்சாமி மதுரை வழியாக எந்த மாவட்டத்துக்கு சென்றாலும், மதுரையில் அவரை வைத்து ஒரு நிகழ்ச்சியை நடத்துவதை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும், செல்லூர் ராஜும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். 

ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளரான ஆர்.பி.உதயகுமார், தன் சொந்த செலவில் 1,000 இளைஞர்களுக்கு புதிய சைக்கிளை இலவசமாக கொடுத்து, அவர்கள் ஐந்து நாட்கள் மதுரை மாவட்டம் முழுக்க அதிமுக அரசின் திட்டங்களை சாதனைகளை எடுத்து சொல்லும் வகையில் இந்த பேரணியை நடத்துவதாக கூறினார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள  பொதுமக்களையும் திரட்டி கொண்டு வந்திருந்தார். இன்று காலை விருதுநகர் செல்லும் முன் மதுரை மாநகருக்குள் புதிய பாலத்துக்கும், கட்சி அலுவலகத்துக்கும் அடிக்கல் நாட்டு விழாவை அமைச்சர் செல்லூர் ராஜு, தன் பங்குக்கு முதலமைச்சரை வைத்து நடத்தினார். இதனால் இன்று முழுவதும் மதுரையில் பல பகுதிகளில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.