'மணல் குவாரி அமைக்கக் கூடாது'- மணல் சாப்பிடும் போராட்டம் நடத்திய கிராம மக்கள்

ஜி.சதாசிவம்
போராட்டம்

மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் மணல் சாப்பிடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் அருகே உள்ள மணவாளநல்லூரில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்துவருகின்றனர். மணவாளநல்லூர், கோமங்கலம், பரவளூர், கச்சிபெருமாநத்தம் ஆகிய பகுதிகள் அனைத்தும் மணிமுக்தாற்றின்  கரையோரம் அமைந்துள்ளது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் அனைவரும் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில வருடங்களாக போதுமான மழையில்லாததாலும் மணிமுக்தாற்றில் தண்ணீர் செல்லாததாலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயம் முழுவதும் பாதிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சூழ்நிலையில், மணவாளநல்லூர் மணிமுத்தாற்றில் மணல் குவாரி அமைப்பதற்கான நடவடிக்கையில் அரசு அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளனர். இதற்கு, அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல், மீண்டும் மணல் குவாரி அமைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், மணல் குவாரி  திறப்பதற்காக விழுப்புரம் பொதுப்பணித்துறை (மணல்) செயற்பொறியாளர் கண்ணன், விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராதேவி, சீனுவாசன் மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, ஊராட்சித்துறை அதிகாரிகள் பலர் வந்தனர். அவர்கள், ஆற்றிக்கு சென்று மணல் குவாரி அமைக்கும் இடத்தைப் பார்வையிட்டு ஆற்றிலிருந்து வெளியே வந்தனர்.  தகவலறிந்து திரண்டுவந்த கிராம மக்கள், அதிகாரிகளை வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தினர். அவர்களின் கார்களின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். 

அப்போது, வாழை இலையைப் போட்டு, அதில் மணலை வைத்து சாப்பிடும் போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள், `ஏற்கெனவே எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், ஆற்றில் உள்ள மணலை சுரண்டிச் சென்றால், மேலும் நிலத்தடி நீர்மட்டம் குறையும். அப்போது எங்களால் முழுஅளவில் விவசாயம் செய்ய முடியாமல்போகும். இப்போதே மண்ணைத் தின்று பழகிக்கொள்கிறோம்’ எனத் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள், விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் அனைவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவுசெய்யலாம் என கூறிச் சென்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.