`முத்தரசனா... சி.மகேந்திரனா..?’ மாநிலச் செயலாளர் தேர்தலில் வெல்லப்போவது யார்?

கு.ராமகிருஷ்ணன்
அரசியல்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மார்ச் 28, 29, 30, 31 ஆகிய நான்கு நாள்கள் நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பதவிக்கான தேர்வு நடைபெறவுள்ளது. இதில் யார் தேர்ந்தெடுக்கப்படுவார் எனப் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். இதில் மாநிலச் செயலாளருக்கான தேர்தலும் நடைபெறும். கடந்த முறை இக்கட்சியின் அதிகாரபூர்வ இலக்கிய இதழான தாமரையின் ஆசிரியர் சி.மகேந்திரன் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனப் பரவலாக எதிர்க்கப்பட்டது. ஆனால், திடீர் திருப்பமாக யாருமே எதிர்பார்க்காத முத்தரசன் தேர்தலில் பங்கு கொண்டு ஒருசில வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். அது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது.

சி.மகேந்திரன் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த அப்போதைய மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் சாதுர்யமாகக் காய்கள் நகர்த்தியதால்தான் சி.மகேந்திரன் தோற்கடிக்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது. கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருப்பவர்கள் அரசியல் சதுரங்க விளையாட்டில் இறங்கமாட்டார்கள் என மக்கள் பெரிதும் நம்பிக்கொண்டிருந்த சமயத்தில் கடைசி நேர மாற்றம் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களையேகூட வியப்பில் ஆழ்த்தியது. தற்போது நடைபெற உள்ள தேர்தலில் தற்போதைய மாநிலச் செயலாளர் முத்தரசனுக்கும் சி.மகேந்திரனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தமுறை நாங்கள் ஏமாற மாட்டோம். சி.மகேந்திரன் கண்டிப்பாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தெரிவித்தார் திருவாரூரைச் சேர்ந்த சி.பி.ஐ பிரமுகர் ஒருவர். கடைசி நேரத்தில்  எதுவும் நடக்கலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.