`பணத்தை எப்ப தருவீங்க..!’ - முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட கரும்பு விவசாயிகள்!

சுகன்யா பழனிச்சாமி
அரசு

தமிழக முதலமைச்சர் வீட்டின் முன் காத்திருக்கும் போராட்டம் நடத்திய 1,000-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு 4 ஆண்டுகளாக ரூ.1,400 கோடி பாக்கி பணம் வழங்க வேண்டி யுள்ளது. மேலும், கூட்டுறவு ஆலைகளும் ரூ.287 கோடி பாக்கி பணமாக, கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டும். இதுதொடர்பாக, கரும்பு விவசாயிகள் சங்கம் சக்கரை துறை ஆலையர்கள், தொழில்துறைச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களிடம் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். 

கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகையைத் தனியார் சக்கரை ஆலைகள் இன்றுவரையிலும் திருப்பி தரவில்லை. தமிழக அரசாங்கமும் இதுதொடர்பாக, முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், தனியார் ஆலை முதலாளிகள் மாநில அரசு நிர்ணயித்த விலையைத் தர முடியாது என்று கறாராகப் பேசினர். இதனால், இந்தக் கூட்டம் தோல்வியில் முடிந்தது. 

இதையடுத்து, தமிழக அரசாங்கம் எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்தான், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டின் முன் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தி வருகிறோம் எனப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், நிலுவைப் பணத்தைத் திருப்பித் தந்தால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம், இல்லையென்றால் போராட்டம் தொடரும் எனவும் எச்சரித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறை கைது செய்து, சென்னை சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டையில் உள்ள மண்டபங்களில்  அடைத்து வைத்திருக்கின்றனர்.

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் காலம் தாழ்த்தும், மத்திய அரசைக் கண்டித்து, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற விவசாயிகளைப் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

உச்ச நீதிமன்றம் வழங்கிய, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான தீர்ப்பை, பிரதமர் மோடி தலைமையிலான ஆளும் பா.ஜ.க அரசு நிராகரித்து வருவதாக, இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டி பேசினார். பிரதமரை நேரில் சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து வலியுறுத்த வேண்டும் எனத் தமிழக அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், தமிழக அரசின் அனைத்துக்கட்சி குழுவை பிரதமர் சந்திக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.