போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக வங்கி ஊழியர்கள் சம்மேளனம் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

கார்த்திக் துரைமகாராஜன்.சி
போராட்டம்

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில், திங்கள்கிழையன்று அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக இந்திய வங்கி சம்மேளனம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து இந்திய வங்கி சம்மேளனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 'தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வுக்காகவும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் ஓய்வு கால நிலுவைத் தொகையை வழங்கிட வலியுறுத்தியும், பணியில் உள்ள தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பணத்தை வழங்கிடக் கோரியும் ஓராண்டுக்கும் மேலாகப் போராடி வருகிறார்கள். ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பல ஆண்டு காலமாக கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை அரசாங்கம் வழங்கவில்லை.

பாதிப்புக்குள்ளான தொழிலாளர்கள் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், நீதிமன்றம் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டுமென்று உத்தரவிட்ட தீர்ப்பையும் அரசு அமலாக்கவில்லை. இதனால், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் குடும்பங்கள் சொல்லொணா துயருக்கு ஆளாகியுள்ளனர். ஒரு லட்சத்து முப்பதாயிரம் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காக நிர்வாகம் மற்றும் அமைச்சர்கள் மட்டத்தில் கடந்த 16 மாதங்களில் 21 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை. 2017 மே மாதம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது, மூன்று மாதத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையைத் திரும்ப வழங்குவதாக மாநில அமைச்சர்கள் அளித்த உறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. 

ஜனவரி 4-ம் தேதியன்று தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மாநில அரசு பெரும்பான்மை தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சி.ஐ.டி.யு, தொ.மு.ச உள்ளிட்ட சங்கங்களைப் புறக்கணித்துவிட்டு ஆளுங்கட்சி தலைமையிலான சங்கம் உள்ளிட்ட ஒரு சில சங்கங்களோடு தொழிலாளர் நலன்களுக்கு விரோதமான ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கி, பெரும்பான்மை தொழிலாளர்கள் மீது திணிக்க முயற்சிப்பதை எதிர்த்து தொழிலாளர்கள் கடந்த நான்கு தினங்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்று சுமுகத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, போராடும் தொழிலாளர்களை பிளவுபடுத்தி, அச்சுறுத்தி போராட்டத்தை ஒடுக்கிட மாநில அரசு முயற்சித்து வருகிறது.

நியாயமான நீதி கோரி மாண்புமிகு நீதிமன்றங்கள் முன்பு தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும் ஏற்கெனவே பலமுறை முறையிட்டுள்ளனர். ஊழியர்கள் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், நீதிமன்ற அவமதிப்பு தொடரப்பட்ட பின்னரும் கூட நிர்வாகம் அந்த உத்தரவுகளை கண்டுகொள்ளவில்லை. தொழிலாளர்களுக்கு நீதிமன்றம் மூலம் கிடைக்கக்கூடிய சிறு பலன்களைக்கூட அமுல்படுத்தாமல் காலம் தாழ்த்தும் அதே நிர்வாகங்கள், தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்தை மட்டும் நீதிமன்றத் தலையீட்டைக் காட்டி நசுக்க முயற்சிப்பது ஜனநாயக விரோதச் செயலாகும்.

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தன்னுடைய முழு ஆதரவை நல்குகிறது. உடனடியாக போக்குவரத்துத் துறை நிர்வாகமும், தமிழக முதலமைச்சரும் இந்தப் பிரச்னையில் தலையிட்டு போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றது.

8.1.2018 திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை பாரிமுனை எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நடைபெறும் அனைத்து மத்தியதர தொழிற்சங்கங்களின் சார்பாக நடைபெறும் போராட்ட ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் கலந்துகொள்வார்கள்' என்று குறிப்பிட்டுள்ளனர்.