எஞ்சின் பழுதானதால் பாம்பன் பாலத்தை கடக்க முடியாமல் போன சரக்குக் கப்பல்!

இரா.மோகன்
அரசியல்

மும்பையிலிருந்து பாம்பன் வழியாக கொல்கத்தா செல்லும் கப்பலின் எஞ்சின் பழுதானதால் பாம்பன் பாலத்தை கடக்க முடியாமல் மன்னார் வளைகுடா கடலில் நிறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் மேற்குப் பகுதி துறைமுகங்களிலிருந்து கிழக்குப் பகுதி துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்கள் பாம்பன் பாலத்தின் வழியாகச் சென்று வருகின்றன. இதற்கென பாம்பன் ரயில் பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் செல்ல ஏதுவாக திறந்து மூடும் வகையிலான ஹெர்ஜர் பாலம் உள்ளது. இந்நிலையில் மும்பையிலிருந்து கொல்கத்தா துறைமுகத்திற்குச் செல்லும் சரக்குக் கப்பல் ஒன்று பாம்பன் பாலத்தை கடக்க முயன்றது. அந்தக் கப்பல் பாலத்திற்கு சில மீட்டர் தூரத்திற்கு முன்பாக வந்துகொண்டிருந்த நிலையில் கப்பலில் இருந்த இரு எஞ்சின்களில் ஒன்று பழுதானது.


 

காற்றின் வேகமும், கடல் நீரோட்டமும் வழக்கத்தை விட இன்று கூடுதலாக இருந்த நிலையில் ஒற்றை எஞ்சினைக் கொண்டு கப்பலை இயக்குவதால் நீரோட்டத்தின் வேகத்தில் கப்பல் இழுத்துச் செல்லப்பட்டு பாலத்திற்கு சேதம் ஏற்படும் நிலை உருவாகும் என்பதால் துறைமுக அதிகாரிகள் அந்தச் சரக்குக் கப்பல் பாலத்தினை கடந்துசெல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அந்தக் கப்பல் மீண்டும் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சுமார் 45 மீட்டர் நீளம் கொண்ட அந்தக் கப்பலின் பழுதடைந்த எஞ்சின் சரி செய்யப்பட்ட பின் பாம்பன் பாலத்தை கடந்து செல்ல அனுமதியளிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்தக் கப்பலுடன் பாலத்தை கடக்க மஹாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி துறைமுகத்திலிருந்து வந்த மற்றொரு கப்பல் பாம்பன் பாலத்தை கடந்து ஆந்திர மாநிலம் விசாகபட்டினம் நோக்கிச் சென்றது. கப்பல் பாலத்தினை கடந்து செல்லும் காட்சியைக் காண பாம்பன் சாலை பாலத்தின் மீது ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டிருந்தனர்.