உயிருக்கு உலைவைக்கும் அரசு பேருந்துகள்... கவலைப்படாத தமிழக அரசு... ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

ஜெ.அன்பரசன்
அரசியல்

தீபாவளி வந்துவிட்டது, அனைவரும் அவரவர் ஊருக்குச் செல்ல வேண்டும். சென்னையிலிருந்து மட்டும் பல லட்சம் மக்கள் ஊருக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அவ்வளவு பேருக்கும் போதுமான பஸ் வசதி இருக்கிறதா என்றால், நிச்சயம் இல்லை. இருந்தாலும் அரசு ஒவ்வொரு பண்டிகைக் காலங்களிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்குகின்றன. தற்போதும் தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு  4,820 அரசுப் பேருந்துகளைச் சென்னையிலிருந்து இயக்கப்படுகின்றன. இவையும் நிச்சயம் போதாது என்பதே உண்மை. போதுமான அளவில் அரசுப் பேருந்துகள் இருக்கிறதா என்பது ஒருபுறம் இருக்கட்டும். மறுபுறம், தற்போது இருக்கும் அரசுப் பேருந்துகள் நல்ல நிலையில் இருக்கிறதா...? அதுதான் இல்லை என்கின்றனர் பயணிகள். சென்றுக்கொண்டிருக்கும்போதே பஸ் பிரேக் டவுன் ஆவது, மழை பெய்யும்போது பஸ்ஸுக்குள் குடை பிடிப்பது போன்ற நிகழ்வுகளைத் தினந்தோறும் செய்திகளில் படித்திருப்போம், நேரடியாகவும் பார்த்திருப்போம்.

பேருந்து விபரங்கள்

இவையனைத்துக்கும் காரணம் சொல்கிறார்  தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார். "தமிழ்நாட்டுல மொத்தம் 22,533 அரசுப் பேருந்துகள் இருக்கின்றன. அதில், சென்னை மாநகரப் பேருந்துகள் (MTC) 3,688; நகரப் பேருந்துகள் (TOWN SERVICE) 6,916; புறநகர் சேவைப் பேருந்துகள் (MOFUSSIL SERVICE) 8,561: மலைவழிப் பேருந்துகள் (GHAT SERVICE) 528, மாவட்டங்களை இணைக்கும் எக்ஸ்பிரஸ் பேருந்துகள் (INSIDE STATE) 648; வெளிமாநிலங்களுக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் பேருந்துகள் (OUTSIDE STATE) 435; ஸ்பேர் பஸ்கள் (SPARE BUS) 1,757 இருக்கின்றன. போக்குவரத்துத் துறை என்பது சர்வீஸ் செக்டார் (SERVICE SECTOR). மக்களுக்குச் சேவை செய்வதில் யாருடைய குறுக்கீடும் வரக்கூடாது. எந்த காரணத்தாலும் இந்தச் சேவை தடை ஆகக்கூடாது என்றுதான் போக்குவரத்துத் துறை 'அரசியலமைப்பு சட்டப் பாதுகாப்பு' விதியில் இருக்கிறது. ஆனால், இன்று போக்குவரத்துத் துறை பெரும் நஷ்டத்தில் ஓடுகிறது. அதற்குக் காரணம் அரசாங்கம் மட்டும்தான். ஒருவருடத்துக்கு 4,000 புது பேருந்துகளை அரசு வழங்க வேண்டும். ஆனால், இன்று 200 பேருந்துகள் வருவதே மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. 

காலாவதியான பேருந்துகள் 

ஓர் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், 22,533 மொத்த அரசுப் பேருந்துகளில் சுமார் 14,000-க்கும் அதிகமான அதாவது, 60 சதவிகிதத்துக்கும் மேலான பேருந்துகள் காலாவதியாகிவிட்டன. ஒரு பேருந்தின் ஓட்டம் 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் மட்டும்தான். அதன்பின்பு அந்தப் பேருந்துகள் இயக்கத்தில் இருக்கக்கூடாது. இன்று, தமிழ்நாட்டில் இயக்கத்தில் ஓடிக்கொண்டிருக்கும் 60 சதவிகிதப் பேருந்துகள் பல ஆண்டுகளாக இப்படித்தான் இருந்துவருகின்றன. இதுபற்றிப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள், “பலமுறை தமிழக அரசிடம் சொல்லிவிட்டோம். ஆனால், யாரும் காதில் வாங்கிக்கொள்வதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஒவ்வொரு டெப்போவிலும் பேருந்துகளுக்கு பாடி கட்டும் யூனிட் இருந்தது. ஒருநாளைக்கு 2-லிருந்து 4 பேருந்துகள் வீதம் அந்தந்த டெப்போ ஊழியர்களே அதனைக் கட்டிவிடுவார்கள். ஆனால், அந்த யூனிட்கள் அனைத்தும் இன்று எடுக்கப்பட்டுவிட்டன. இதற்குக் காரணம், மொத்தமாக அரசு வழங்கும் பேருந்துகள் அனைத்தும் பாடி கட்டுவதற்காகக் கரூர், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் உள்ள தனியார் பாடி கட்டும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதன்மூலம் கிடைக்கும் பணத்தில் பெரும் பங்கு அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் செல்கிறது.” என்கின்றனர்.

நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துத் துறை 

பொதுவாக ஆம்னிப் பேருந்துகளில் 45 சீட்கள் இருக்கும். 300 கிலோ மீட்டருக்குக் கட்டணம் குறைந்தபட்சம் 600 ரூபாய் வசூலிக்கிறார்கள். ஒருமுறை அவர்களின் மொத்த வருமானம் 27,000 ரூபாய். அதே 300 கிலோமீட்டர்தான், சென்னை மாநகரப் பேருந்துகள் ஒருநாளைக்கு ஓடி சுமார் 1,500-க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச்செல்கின்றன. ஆனால், அதன்மூலம் கிடைக்கும் மொத்த வருமானம் 4,000- லிருந்து 5,000 ரூபாய் வரைதான். திடீரென்று டிக்கெட் விலையை ஏற்ற முடியாது. முதலில் பேருந்துகளின் தரத்தை ஆம்னி பஸ் அளவுக்கு உயர்த்த வேண்டும். பின்னர், மக்களே அதன் தரத்தைப் புரிந்துகொண்டு கட்டண ஏற்றத்துக்கு எதிர்ப்புச் சொல்லமாட்டார்கள். ஒருநாளைக்கு 8,000 பயணிகளை ஏற்றிச்செல்லும் மெட்ரோ ரயிலுக்கு அரசால் வழங்கப்பட்டத் தொகை 15 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், ஒருநாளைக்கு தமிழகம் முழுவதும் சுமார் இரண்டரைக் கோடி பயணிகளை ஏற்றிச்செல்லும் அரசுப் போக்குவரத்துத் துறைக்கு அரசு வழங்கியது 10,000 கோடி ரூபாய். தமிழகத்தில் பல பேருந்துகள், பல பணிமனைகள், 70-க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்கள், பணிமனைக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இடங்கள் பெறப்பட்டன. இவையனைத்தும் போக்குவரத்துக் கழகம் சம்பாதித்த சொத்து. தற்போது அரசுப் பேருந்துகளில் சாதாரணப் பேருந்துக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 42 பைசாவும், விரைவுப் பேருந்துகளில் (Express) 56 பைசாவும், சொகுசுப் பேருந்துகளில் (deluxe) 60 பைசாவும், அதிநவீன சொகுசுப் பேருந்துகளில் (Super Deluxe)75பைசாவிலிருந்து 95 பைசாவரையும் வாங்கப்படுகிறது. 

பேருந்துகளின் தரம் குறித்து அதனை இயக்கும் ஓட்டுநர் ஒருவரிடம் கேட்டோம். "பேருந்துகளை இயக்க எங்களுக்கே பயமாதான் இருக்கு. ஒவ்வொரு முறையும் பேருந்துகளை இயக்குறதுக்கு முன்னாடி எங்க தைரியத்தையும் மீறிக் கடவுள் நம்பிக்கையிலதான் பேருந்துகளை இயக்குறோம். எப்போ என்ன நடக்கும்னே தெரியாது. அந்த அளவுக்கு மோசமான நிலையிலதான் அனைத்து அரசுப் பேருந்துகளுமே இருக்கு. ஒருமுறை நைட்ல பயணிகளை ஏத்திக்கொண்டு போகும்போது ஹெட் லைட் ஆஃப் ஆகிடுச்சி. என்ன பண்றதுனே தெரியலை. அப்புறம் அந்த ராத்திரில ஒரு மெக்கானிக்க கூட்டிட்டு வந்து சரி பண்றதுக்குள்ள மூணு மணி நேரத்துக்கு மேல ஆகிடுச்சி. நேரத்துக்கு பஸ் வரலைன்னா டிரைவர் கண்டக்டரைத் திட்டுற மக்கள்... போக்குவரத்துத் துறையை இவ்ளோ மோசமா வெச்சிருக்குற அரசாங்கத்தைக் கேள்வி கேட்க மாட்டேங்குறாங்க" என்றார் வருத்தத்துடன்.

அரசு செய்யுமா?

''காலாவதியான பேருந்துகளை நிறுத்தி அதற்குப் பதிலாக புதிய பேருந்துகளைச் சொகுசு முறையில்விட்டுக் கட்டண முறையில் சில மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் மக்கள் அரசுப் பேருந்துகளில் விருப்பத்துடன் பயணம் செய்வார்கள். மக்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்தது போலவும் இருக்கும், போக்குவரத்துத் துறைக்கு லாபம் வந்ததுபோலவும் இருக்கும். மக்களை வாட்டி வதைக்கும் ஆம்னி கட்டணக் கொள்ளையில் இருந்து மக்கள் தப்பித்தது போலவும் இருக்கும். இதை அரசு செய்யுமா?" என்று கேள்வி எழுப்புகின்றனர் பயணிகள்.

கோர விபத்துகள் 

கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை அரசுப் பேருந்துகள் எண்ணற்ற பல கோர விபத்துகளுக்கு உள்ளாகி இருக்கின்றன. அந்த விபத்துகளில் 6,864 பேர் இறந்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசுப் பேருந்துகளில் ஏற்பட்ட விபத்துகளும் அதில் ஏற்ப்பட்ட உயிர் இழப்புகளும் ஆண்டுவாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 2012-13-ம் ஆண்டு நடந்த கோர விபத்துகளின் எண்ணிக்கை 1,233. இந்த விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,382. 2013-14- ம் ஆண்டு 1,187 கோரவிபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்துகளில் மொத்தம் 1,318 பேர் இறந்துள்ளனர். 2014-15-ம் ஆண்டு 1,165 விபத்துகள் நடந்துள்ளன. இறந்தவர்களின் எண்ணிக்கை 1,331. 2015-16- ம் ஆண்டு 1,258 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,460 பேர் இறந்துள்ளனர். 2016-17-ம் ஆண்டில் 1,209 விபத்துகளும், இந்த விபத்துகளில் மொத்தம் 1,373 பேர்களும் இறந்துள்ளனர்.

பயணிகளின் கருத்தைக் கவனத்தில்கொள்ளுமா தமிழக அரசு?