ரப்பர் தொழிலாளர்கள் கருணைத்தொகை கேட்டு காத்திருப்புப் போராட்டம்

த.ராம்
அரசியல்

குமரி மாவட்டத்தில் உள்ள அரசு ரப்பர் கழகத்தில், சுமார் 2500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகிறார்கள். கடந்த ஆண்டு, இவர்களுக்கு  20 சதவிகிதம் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு, 20 சதவிகித போனஸ் மற்றும் 10 சதவிகிதம் கருணைத் தொகை என்று 30 சதவிகிதமாக உயர்த்தித் தரவேண்டும் என்றும் ரப்பர் தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள். தொழிலாளர்கள், இது தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். அதைத் தொடர்ந்து, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக, கடந்த 6-ம் தேதி  நடைபெற இருந்த போராட்டம் கைவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த 9-ம் தேதி, தொழிலாளர்களின் போனஸ் பற்றிய அறிவிப்பை தமிழக முதலமைச்சர் வெளியிட்டார். அதில், அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்களின் போனஸ் பற்றிய எந்தத் தகவலையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதைத் தொடர்ந்து, குலசேகரத்தில் அனைத்துத் தொழிலாளர் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில், போனஸ் விவரங்களை உடனடியாக அறிவிக்க வேண்டும். தீபாவளிக்கு 20 சதவிகிதம்  போனஸ் 10 சதவிகிதம் கருணைத் தொகையை வழங்கக்கேட்டு, இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவுசெய்யப்பட்டது.

அதன்படி, குமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். மேலும், நாகர்கோவிலில் அரசு ரப்பர் கழக இயக்குநர் அலுவலகம் முன்பு, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடவும் அவர்கள் முடிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக, சி.ஐ.டி.யூ தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையில், அனைத்து தொழிற்சங்கத் தொழிலாளர்கள் நாகர்கோவில் அரசு ரப்பர் கழக அலுவலகம் முன்பு இரவு பகல் பாராமல் தொடர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு, தொழிலாளர்கள் உரிமையை நிறைவேற்றுமா?