மண் மூடப்பட்ட கீழடி! - கொதிக்கும் தமிழ் ஆர்வலர்கள்

பாலமுருகன். தெ
அரசியல்

கீழடி அகழாய்வு ஆராய்ச்சி,  செப்டம்பர் 30-ம் தேதியோடு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. 'மூத்தகுடி தமிழ்குடி' என்பதற்கான வரலாற்று ஆவணம் கீழடியில் கிடைத்திருப்பது உலகத் தமிழர்களுக்குக் கிடைத்த பெருமை.  மிகவும் தொன்மையான கீழடி ஆய்வு, இன்றைக்கு பாதியோடு நிறுத்தப்பட்டிருக்கிறது. இங்கே மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்றுகள் இல்லை. தொழிற்சாலைகள் இருந்திருக்கலாம் என்கிற ரீதியில் மழுப்பலான அறிக்கை கொடுத்து, மண்ணைபோட்டு மூடுவிழா கண்டிருக்கிறார், இதன் கண்காணிப்பாளரான ஸ்ரீராமன்.

தமிழர்களின் நாகரித்தை, தொன்மையை இருட்டடிப்பு செய்வதாக  தமிழ் ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இன்று ஏற்கனவே தோண்டப்பட்ட 9 குழிகளையும் மூடும் பணி நடைபெற்றுவருகிறது.

சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில், கடந்த 2015-2016-ம் ஆண்டு வரை தொல்லியல் துறை நடத்திய அகழ்வாராய்ச்சியில், 2500 ஆண்டுகள் பழைமையான தமிழர்களின் நாகரிகம். 5000-த்துக்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் என முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அகழ்வாராய்ச்சியைக் கீழடி அகழாய்வுக் குழுவின் தலைவராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் மிகுந்த ஆர்வத்துடனும் முழுமையாக இந்த ஆய்வை நடத்திவந்தார் .

மூன்றாம் கட்ட ஆய்வு பணிகள் முடிவடைந்துள்ளது. நீதிமன்றம் நான்காம் கட்ட ஆய்வுக்கு, தமிழக அரசு மற்றும் மத்திய அரசு தொல்லியல் துறை தொடர்ந்து ஆய்வு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஆய்வுப் பணிகள் நடந்த குழிகள் இன்னும் மூடப்படாமல் அப்படியே கிடக்கின்றன. அதிகாரிகள் யாரும் அங்கு இல்லாததாலும், கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் பார்க்க முடியாமலும்  சுற்றுலாப் பயணிகள் கீழடிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். நான்காம் கட்ட ஆய்வு நடக்குமா... நடக்காதா என்கிற பட்டிமன்றம் சமூக ஆர்வலர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.110 ஏக்கரிலும் ஆய்வுசெய்யப்பட வேண்டும். மக்களோடு மக்களாக இருக்கும் அதிகாரி வரவேண்டும். அப்போதுதான் நாங்கள் நிலம் கொடுப்போம் என்று விவசாயிகள் ஒரு பக்கம் கோரிக்கை வைத்துவருகிறார்கள். இந்நிலையில்தான் குழிகள் மூடப்பட்டிருக்கின்றன. இதோடு நின்றுவிடுமா கீழடி அகழாய்வு ஆராய்ச்சி பணி? இந்தக் கேள்வி, ஒவ்வொரு தமிழர்களின் கேள்வியாக இன்று எதிரொலித்துக்ககொண்டிருக்கிறது.