துர்காஷ்டமியை முன்னிட்டு காளிமலை கோயிலுக்கு சமுத்திரகிரி யாத்திரை!

த.ராம்
கோயில்கள்

கன்னியாகுமரி-கேரள எல்லையான பத்துகாணி அருகே உள்ள காளிமலையில் பிரசித்திப் பெற்ற பத்ரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் துர்காஷ்டமி திருவிழா இன்று தொடங்கியது. இத்திருவிழா வரும் 30-ம் தேதி வரை தொடர்ந்து 6 நாள்கள் நடக்கிறது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு பக்தர்கள்  இருமுடி கட்டி புனித நீர் சுமந்து பாதயாத்திரை செல்வது வழக்கம்.

காளிமலையில் துர்காதேவி, தர்ம சாஸ்தா, நாகயட்சி, சப்த கன்னியர் போன்ற தெய்வங்களின் சந்நிதிகள் உள்ளன. மலையின் ஒரு பக்கம் கேரளாவின் அழகை மேலிருந்து பார்க்கலாம். மறுபக்கம் தமிழகத்தின் இயற்கை அழகைப் பார்க்கலாம். இது மிக வசீகரமான இடம். இங்கிருக்கும் காளி தீர்த்தம் கோடையிலும் வற்றாதது. இது பல நோய்களைத் தீர்க்கும் மூலிகைத் தீர்த்தம் என்று கூறுகிறார்கள். சித்ரா பெளர்ணமிதான் இங்கு விசேஷம். அப்போது பல பெண்கள் பொங்கலிட்டு காளிதேவியை வழிபடுகிறார்கள்.

மலை உச்சியில் இருக்கும் காளிதேவி கோயிலுக்கு ஜீப்பைத் தவிர எந்த வாகனமும் இந்த வழுக்கும் ரோட்டில் போகமுடியாது. இந்த ஆண்டும் துர்காஷ்டமி  விழாவை முன்னிட்டு  பாதயாத்திரை நிகழ்ச்சி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் இருந்து தொடங்கியது. சமுத்திர கிரி பாதயாத்திரை என்கிற பெயரில் இந்த யாத்திரை நடக்கிறது. கொட்டாரம், பொற்றையடி, சுசீந்திரம், ஒழுகினசேரி, வடசேரி, தக்கலை, மார்த்தாண்டம் உண்ணாமலைக்கடை, களியல். கடையாலுமூடு வழியாக வரும் 28-ம் தேதி பத்துகாணி காளிமலை பத்ரகாளி அம்மன் கோயிலைச் சென்றடைகிறது.