கலெக்டர் சாருக்காக மூணு மணி நேரமா காத்துக்கிடக்கிறோம்! துப்புரவுத் தொழிலாளர்கள் புலம்பல்!

அருண் சின்னதுரை
அரசியல்

கலெக்டர் சாருக்காக மூணு மணி நேரமா காத்துக்கிடக்கிறோம். துப்புரவுத் தொழிலாளர்கள் புலம்பல் !

மதுரை மாநகராட்சியின் சார்பாக, டெங்கு விழிப்பு உணர்வுச் செயல்பாடு, மாவட்டம் முழுதும் தொடர்ச்சியாக  நடைபெற்றுவருகிறது. ஒவ்வோர் இடமாக தினமும் சுத்தம்செய்து, துப்புரவுப் பணியாளர்கள் விழிப்பு உணர்வு செய்கின்றனர். இன்று, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுத்தம்செய்யும் விழிப்பு உணர்வூட்டும் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

மாவட்ட ஆட்சியர் விரைவாக வந்துவிடுவார் என்பதற்காக காலை 9 மணிக்கே மாநகராட்சி ஊழியர்களை வரவழைத்துள்ளனர் அதிகாரிகள். இந்நிலையில், 12:30 மணி ஆன பிறகும் மாவட்ட ஆட்சியர் விழாவில் பங்கேற்க வரவில்லை. காலை முதலே சாப்பிடாமல் கலெக்டர் சாருக்காகக் காத்துக்கிடக்கிறோம் என்று துப்புரவுத் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர். சுமார் 200 பேருக்கும் மேலான ஊழியர்கள் காலை முதலே காத்துக்கிடப்பது, மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரத்தை முகம்சுழிக்க வைத்தது .

அதிகாரிகளிடம் விசாரித்ததற்கு, ''அவருக்கு இன்று திடீரென வேலைப் பளு அதிகமாகிவிட்டது. மாவட்ட ஆட்சியர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் பிரச்னையைப் பார்வையிடச் சென்றுள்ளார், விரைவில் வந்துவிடுவார்'' என்று தெரிவித்தனர் .