ஜி.எஸ்.டி.. ஏன் எதற்கு எப்படி? - #GST

கெளதமன் முராரி & Karuppiah
கலை

இந்தியப் பொருளாதாரம் பற்றி மாதச் சம்பளம் வாங்கும் சாமானிய இந்தியர்களையும், வயிற்றுப் பசி இருந்தும் வரி பற்றிப் பேசும் இந்தியர்களையும் உருவாக்கி இருக்கும் விவாதப் பொருளாக உருவெடுத்திருக்கிறது ஜி.எஸ்.டி (GST) என்றழைக்கப்படும் பொருள்கள் மற்றும் சேவைகள் வரி. சரி அப்படி இந்த ஜி.எஸ்.டியில் என்னதான் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது எனப் பார்ப்போம்.


இந்திய அரசுக்குப் பல வழிகளில் வருமானம் வருகிறது. அதில் மிக முக்கியமான வழி, வரி வருவாய்கள்தான். இந்தியாவிற்குக் கிடைக்கும் வரி வருவாய்களை இரண்டு பெரிய பிரிவுகளாகப் பிரிக்கலாம். 1. நேரடி வரி வருவாய். 2.மறைமுக வரி வருவாய். 

1. நேரடி வரி வருவாய் : 

நாட்டு மக்கள் சம்பாதிக்கும் பணம் மற்றும் நாட்டு மக்கள் வைத்திருக்கும் சொத்துக்களின் மீது விதிக்கப்படும் வரிகள்தான் நேரடி வரி வருவாய். இந்த வரியை மக்கள் தங்கள் வருமான வரிக் கணக்குகள் வழியாகப் பட்டயக் கணக்காளர்கள் உதவியுடன் மக்களே நேரடியாக அரசாங்கத்துக்குச் செலுத்துவார்கள். வருமான வரி, சொத்து வரி போன்றவை நேரடி வரிகளுக்கான உதாரணங்கள். ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்தப்படுவதால், இந்த நேரடி வரிகளில் சட்டரீதியாக எந்த மாற்றமும் இருக்காது. இது தனி நபர்கள், வியாபாரிகள், பெரிய நிறுவனங்கள் என்று அனைவருக்கும் பொருந்தும். அவரவர்கள் செலுத்த வேண்டிய வருமான வரித் தொகையினை வழக்கம்போல் செலுத்த வேண்டும். 

2. மறைமுக வரி வருவாய் : 

நாம் பயன்படுத்தும் பொருள்களுக்கு, விதிக்கப்படும் வரிகள்தான் இந்த மறைமுக வரிகள். இந்த வகையான வரிகளைச் செலுத்துவதும் மக்கள்தான், ஆனால் நாமே நேரடியாகச் செலுத்துவதில்லை. நம்மிடம் இருந்து வரிகளை வசூலித்து, நமக்குப் பதிலாக “வியாபாரிகள்” (நமக்குப் பொருள் அல்லது சேவைகளை வழங்குபவர்கள்) அரசுக்குச் செலுத்துகிறார்கள். ஜி.எஸ்.டி (GST) அமல்படுத்தினால் பெரிய அளவில் மாற்றத்துக்கு உள்ளாகப் போகும் வரிகள் இந்த மறைமுக வரிகள்தான். 

ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்தப்பட்டால் காணாமல் போகும் மத்திய அரசின் மறைமுக வரிகள் : 

எக்ஸைஸ் டியூட்டி என்றழைக்கப்படும் கலால் வரிகள் (சிவிடி, எஸ்.ஏ.டி, கூடுதல் கலால் வரிகள், மத்திய விற்பனை வரி, கலால் வரிகளுக்கான செஸ்கள்), சேவை வரி, ஸ்வச் பாரத் செஸ், க்ருஷி கல்யாண் செஸ், இன்ஃப்ராஸ்ட்ரக்சர் செஸ், செகண்டரி அண்ட் ஹயர் எஜுகேஷன் செஸ், சர்சார்ஜ் போன்றவை. மத்திய அரசின் மறைமுக வரிப் பட்டியலில் உள்ள கஸ்டம்ஸ் என்றழைக்கப்படும் சுங்க வரி ஜி.எஸ்.டியில் இணைக்கப்படவில்லை. வழக்கம் போல் சுங்க வரிகள் வசூலிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். 

ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்தப்பட்டால் காணாமல் போகும் மாநில அரசின் மறைமுக வரிகள் : 

கொள்முதல் வரி, மாநில வாட் வரி, பொழுதுபோக்கு வரி, சொகுசு வரி, நுழைவு வரி (Entry Tax), விளம்பரங்களின் மேலான வரி, லாட்டரிகள் - சூதாட்டங்கள் மேலான வரிகள் மற்றும் மாநில செஸ்கள், மாநில சர்சார்ஜ்கள் போன்றவை. 

ஜி.எஸ்.டி என்றால் என்ன : 

இதுவரை வாட், மத்திய விற்பனைவரி, கலால் வரி, சேவை வரி, செஸ்கள் என்று பலப் பெயர்களில் வசூலிக்கப்பட்டு வந்த வரிகளுக்குப் பதிலாக இனி ஜி.எஸ்.டி என்கிற ஒற்றை வரி மட்டுமே வசூலிக்கப்படும். அவ்வளவுதான். 

இந்த ஜி.எஸ்.டி வரியில் ஒரே ஒரு சிறப்பு என்னவென்றால், முதலில் பொருளை வாங்குபவர், ஒரு குறிப்பிட்டத் தொகையை வரியாகச் செலுத்துவார். அதற்கடுத்ததாக அந்தப்பொருளை வாங்குபவர், தான் செலுத்த வேண்டிய வரித் தொகையில், முதலாமவர் செலுத்திய வரித்தொகையை வரவாக வைத்துக் கொள்ளலாம். 

உதாரணமாக ரவி ஒரு பொருளுக்கு வரியாக 10 ரூபாய் செலுத்துகிறார் . பின் ரவி தன் லாபத்தை வைத்து முருகனிடம் விற்கும் போது, முருகன் வரியாக 12 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும். அப்போது ரவி செலுத்திய 10 ரூபாயை முருகன் தன் வரிக் கணக்கில் வரவு வைத்துக் கொண்டு 12 ரூபாய் வரியில் வெறும் 2 ரூபாயை மட்டும் வரியாக அரசுக்குச் செலுத்தினால்போதும். இப்படி வரியை வரவு வைத்துக் கொள்வதற்குதான் இன்புட் டாக்ஸ் க்ரெடிட் (Input Tax Credit) என்று சொல்லப்படுகிறது. 

எதற்கு ஜி.எஸ்.டி - அரசு முன் வைக்கும் காரணங்கள்: 

1. ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே விலையாகக் கொண்டு வர
2 . வரி மேல் வரி விதிக்கப்படுவதைத் தவிர்க்க. 
3. இந்தியாவில் மத்திய அரசு வரி விதிகள் மற்றும் ஒவ்வொரு மாநில அரசுக்கும் ஒரு தனி வரி விதிகள் எனப் பல சட்டங்கள் இருக்கின்றன. அவற்றை ஒருங்கிணைத்து ஒரே சட்டமாகக் கொண்டு வர. 
4. இதுவரைச் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி அரசுப் பதிவு செய்யப்படாமல், மிகக் குறைந்த வருமானமே வருவதாகப் பொய்க் கணக்குக் காட்டி வரி செலுத்தாமல் இருப்பவர்களை வரி செலுத்த வைக்க. 
5. ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டதில் இருந்து, எங்கெல்லாம் சப்ளையாகி, யார் இறுதியாக வாடிக்கையாளரிடம் விற்றார் என்பது வரையான முழு வணிகப் பயணத்தையும் (Audit Trial) கணிணிமயமாக்க. 

ஜி.எஸ்.டியின் நான்கு வரி வகைகள் : 

GST வரி நான்காகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

1.சி.ஜி.எஸ்.டி - மத்திய அரசின் ஜி.எஸ்.டி 

2.எஸ்.ஜி.எஸ்.டி - மாநில அரசின் ஜி.எஸ்.டி

3. யூ.டி.ஜி.எஸ்.டி - யூனியன் பிரதேசங்களுக்கான ஜி.எஸ்.டி.

4.ஐ.ஜி.எஸ்.டி - இன்டகிரேடெட் ஜி.எஸ்.டி. 

பெயருக்கேற்றாற் போலவே சி.ஜி.எஸ்.டி - மத்திய அரசின் ஜி.எஸ்.டி-ல் இருந்து கிடைக்கும் வருவாய் மத்திய அரசுக்கும், எஸ்.ஜி.எஸ்.டி - மாநில அரசின் ஜி.எஸ்.டி-ல் இருந்து கிடைக்கும் வருவாய் மாநில அரசுகளுக்கும், யூ.டி.ஜி.எஸ்.டி - யூனியன் பிரதேசங்களுக்கான ஜி.எஸ்.டி -ல் இருந்து கிடைக்கும் வருவாய் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்படும். 

இதில் ஐ.ஜி.எஸ்.டி மட்டும் கொஞ்சம் சிறப்பு. ஐ.ஜி.எஸ்.டி - இன்டகிரேடெட் ஜி.எஸ்.டி என்பது சி.ஜி.எஸ்.டி மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி அல்லது யூ.டி.ஜி.எஸ்.டி-ன் கலவைதான். ஐ.ஜி.எஸ்.டி ஒரு வரி அல்ல. சொல்லப் போனால் ஐ.ஜி.எஸ்.டி மூலம் எந்த ஒரு வருமானமும் அரசுக்குக் கிடைக்கப்போவதில்லை. ஐ.ஜி.எஸ்.டி முழுக்க முழுக்க வியாபாரிகளுக்கு டாக்ஸ் க்ரெடிட் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு பெயரளவிலான வரி.

ஜி.எஸ்.டியின் ஐந்து வரி வரம்புகள் : 

ஒவ்வொரு பொருள் மற்றும் சேவைக்கும் இவ்வளவுதான் வரி வசூலிக்க வேண்டும் என ஜி.எஸ்.டி கவுன்சில் அறிவுறுத்தி இருக்கிறது. அதன் படி 1.வரி இல்லாதவை. 2. 5 சதவிகிதம் வரி செலுத்த வேண்டியவை 3. 12 சதவிகிதம் வரி செலுத்த வேண்டியவை 4. 18 சதவிகிதம் வரி செலுத்த வேண்டியவை 5. 28 சதவிகிதம் வரி செலுத்த வேண்டியவை என ஐந்து வரி வரம்புகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. 
எப்படி ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும் : 

உதாரணம் : (Chapter 20, 2008, 18%, Point 8, 18.05.2017): இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் கடலைமிட்டாய்க்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும். 

கோவில்பட்டியில் உற்பத்தி செய்யப்பட்ட கடலைமிட்டாயை, சென்னையில் விற்பனை செய்தால் அதற்கு சி.ஜி.எஸ்.டி - 9% மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி - 9% என்று 18% செலுத்த வேண்டும். (இன்ட்ரா ஸ்டேட் என்றழைக்கப்படும் ஒரே மாநிலத்துக்குள் நடக்கும் வணிகப் பரிமாற்றம்.). 

கோவில்பட்டியில் உற்பத்தி செய்த கடலைமிட்டாயைக் கொஞ்சம் தள்ளிப் போய் திருப்பதியில் விற்பனை செய்தால் ஐ.ஜி.எஸ்.டி வரியாக 18% செலுத்த வேண்டும். இரு மாநிலங்களுக்கிடையே நடக்கும் பரிவர்த்தனைக்கு வசூலிக்கப்படும் 18 சதவிகித ஐ.ஜி.எஸ்.டி= சி.ஜி.எஸ்.டி 9% மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி 9% எனப் பிரிக்கப்படும். (இன்டர் ஸ்டேட் என்றழைக்கப்படும் இருவேறு மாநிலங்களுக்கிடையே நடக்கும் வணிகப் பரிமாற்றம்.) 

ஒரு வேளை அந்தமான் நிகோபார் தீவுகளுக்குக் கோவில்பட்டிக்காரர் தன் கடலைமிட்டாயை விற்பனை செய்தாலும் ஐ.ஜி.எஸ்.டி வரியாக 18% செலுத்த வேண்டும். ஒரு மாநிலத்துக்கும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கும் நடக்கும் பரிவர்த்தனைக்கு வசூலிக்கப்படும் 18 சதவிகித ஐ.ஜி.எஸ்.டி= சி.ஜி.எஸ்.டி 9% மற்றும் யூ.டி.ஜி.எஸ்.டி 9% எனப் பிரிக்கப்படும். (இன்டர் ஸ்டேட் என்றழைக்கப்படும் இருவேறு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கிடையே நடக்கும் வணிகப் பரிமாற்றம்.). 

எப்போது வசூலிக்கப்படும்? 

ஒரு பொருளின், ஒவ்வொரு சப்ளையின் போதும் ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படும். தற்போதைய நடைமுறையில் (ஜி.எஸ்.டிக்கு முன்) ஒரு பொருளின் விற்பனையின் போது மட்டுமே வரி வசூலிக்கப்பட்டு வந்தது.

எங்கு வசூலிக்கப்படும் : 

மேலே சொன்ன கடலை மிட்டாய் உதாரணத்தில், எந்த மாநிலத்தில் விற்கப்படுகிறதோ அந்த மாநிலத்தில்தான் மாநில ஜி.எஸ்.டி (எஸ்.ஜி.எஸ்.டி) வசூலிக்கப்படும். சி.ஜி.எஸ்.டி வழக்கம்போல் மத்திய அரசுக்குச் சென்றுவிடும். சுருக்கமாகப் பொருளை வாங்குபவர் எந்த மாநிலத்தில் இருக்கிறாரோ அந்த மாநிலத்தில்தான் மாநில ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படும். 

யார் வசூலித்து, யார் கட்டுவார் : 

ஒரு பொருளை வாங்குகிறவர்தான், அந்தப்பொருளின் விலைக்கு வரியைச் செலுத்தார். பொருளை விற்கிறவர்தான் வரியை வசூலித்து அரசிடம் கட்டுவார். 

ஜி.எஸ்.டியில் சேர்க்கப்படாத பொருள்கள் :

மனிதர்கள் உட்கொள்ளும் மதுபானங்களுக்கு (ஆல்கஹால்) பழையது போலவே மாநில வாட் மற்றும் கலால் வரிகள் செலுத்த வேண்டும். மதுபானங்களைப் போலவே பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் (ஏ.டி.எஃப்), இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் போன்ற ஆறு பொருள்களுக்கும் பழையது போலவே வரிகள் தொடரும். 

ஜி.எஸ்.டியில் இருக்கு ஆனா இல்ல...? 

புகையிலைப் பொருள்கள் மற்றும் சொகுசுக் கார்களுக்கு ஜி.எஸ்.டி வரியோடு கூடுதலாக கலால் வரி மற்றும் செஸ்கள் விதிக்கப்படும். கூடுதலாக விதிக்கப்படும் வரிகள் மூலம் கிடைக்கும் வருவாய்த் தொகை அப்படியே காம்பன்சேஷன் கிட்டிக்கு மாற்றப்படும். இந்தத் தொகை மாநிலங்களுக்குக் கொடுக்க வேண்டிய காம்பன்சேஷன் தொகைக்குப் பயன்படுத்தப்படும். 

புகையிலைப் பொருள்களைப் போன்றுதான் பொழுதுபோக்கு வரியும். தற்போது ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பின் மாநிலத்தின் வருவாய்களான ஆக்ட்ராய் டியூட்டி (Octroi Duty), என்ட்ரி டாக்ஸ் (Entry Tax) எனப்படும் நுழைவு வரி, லோக்கல் பாடி டாக்ஸ் எனப்படும் உள்ளாட்சி மற்றும் ஊராட்சி வரிகள் எல்லாம் ரத்து செய்யப்பட இருக்கின்றன. எனவே மாநிலத்தின் வருவாயைக் காக்க, பொழுதுபோக்கு வரியாக நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் வரி விதிக்கலாம். 


 

அதெல்லாம் இருக்கட்டும் இந்த ஜி.எஸ்.டிக்கு யார் முழு பொறுப்பு?

சகல அதிகாரம் பெறும் ஜி.எஸ்.டி கவுன்சில் : 

ஜி.எஸ்.டி.சி என்றழைக்கப்படும் ஜி.எஸ்.டி கவுன்சில்தான் ஜி.எஸ்.டி வரி சதவிகிதங்களை நிர்ணயிப்பது, வரி வசூலிப்பதற்கான சட்டங்களைக் கொண்டு வருவது, சட்டங்களை அமல்படுத்துவது, நடைமுறைப்படுத்துவதற்கான நிர்வாக வசதிகளைச் செய்து கொடுப்பது என ஜி.எஸ்.டி தொடர்பான அனைத்து விஷயங்களையும் செய்யும். 

இது ஒரு ஃபெடரல் கான்ஸ்டிடியூஷனல் பாடியாக (Federal Constitutional Body) கொண்டு வரப்பட்டிருக்கிறது. மக்களவை, மாநிலங்களவை போன்ற பாடிகளை நாம் லெஜிஸ்லேசன் பாடி என்று அழைக்கிறோம். லெஜிஸ்லேசன் பாடிகள் சட்டங்களைக் கொண்டு வரலாம், சட்டங்களை அனுமதிக்கலாம், சட்டத்தின் மீது விவாதிக்கலாம்... ஆனால் அந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது எக்ஸிக்யூட்டிவ் பாடிகளால்தான். 

இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு கவுன்சிலுக்கு லெஜிஸ்லேஷன் மற்றும் எக்ஸிக்யூட்டிவ் பாடியாக இயங்கச் சட்டத்தில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் அது ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு மட்டுமே. 

ஜி.எஸ்.டி உறுப்பினர்கள் யார்: 

மத்திய உறுப்பினர்கள் - 2, மத்திய நிதி அமைச்சர் மற்றும் மத்திய நிதி இணை அமைச்சர் 
மாநில உறுப்பினர்கள் - 31 , டெல்லி மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் உட்பட அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர் அல்லது அம்மாநில அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களில் ஒருவர். மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை - 33 
மத்திய அரசின் நிதி அமைச்சர் - எப்போதும் சேர்மேனாக தலைமை வகிப்பார். வைஸ் சேர்மேனாக - 31 மாநில உறுப்பினர்களின் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். 

ஒரு ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 50 சதவிகித உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஒரு சட்டத்தைக் கொண்டு வர வேண்டும், ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 75 சதவிகித ஆதரவு ஓட்டுக்களுடன்தான் கொண்டு வர முடியும். 

ஓட்டுக்களின் வெயிட்டேஜ் : 

மத்திய அரசின் இரு உறுப்பினர்களின் ஓட்டுகளையும் சேர்த்து 33.33 சதவிகித மதிப்பளிக்கப்பட்டிருக்கிறது. 31 மாநில உறுப்பினர்களின் ஓட்டுக்களுக்குத் தலா 2.15 சதவிகித ஓட்டு மதிப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆக ஒரு மாற்றைத்தைக் கொண்டு வர வேண்டும் என்றால் கூட குறைந்தபட்சமாக இரு மத்திய உறுப்பினர்கள் மற்றும் 20 மாநில உறுப்பினர்களின் ஓட்டுகள் அவசியம். அப்போது தான் 75 சதவிகித ஓட்டுடன் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.

யாருக்கு இல்லை ஜி.எஸ்.டி : 

சாதாரண மாநிலங்களில் 20 லட்சம் ரூபாய்க்குள் ஆண்டு டேர்ன் ஓவர் இருப்பவர்களுக்கு ஜி.எஸ்.டி சட்டம் பொருந்தாது. சிறப்பு மாநிலங்களான ஜம்மு & காஷ்மீர் மற்றும் வடகிழக்குப் பகுதியிலுள்ள 11 மாநிலங்களில், 10 லட்சம் ரூபாய்க்குள் ஆண்டு டேர்ன் ஓவர் இருப்பவர்களுக்கு ஜி.எஸ்.டி சட்டம் பொருந்தாது. இரண்டு மாநிலங்களுக்கு இடையே வணிகப் பரிமாற்றம் செய்பவர்களுக்கு இந்த விலக்கு செல்லுபடியாகாது.

மத்திய மற்றும் மாநில அரசுகள் அளித்த விலக்குகள் :

இதுவரை ஒவ்வொரு மாநில அரசு மற்றும் மத்திய அரசு தங்கள் மாநிலத்தில் தொழிற்துறையினை மேம்படுத்தி சில வரிச் சலுகைகளைக் கொடுத்திருக்கும். இனி அந்த வரிச் சலுகைகள் எல்லாம் செல்லுபடியாகாது. ஜி.எஸ்.டி கவுன்சில், பொருள்கள் அல்லது சேவைகள் மீது விதித்திருக்கும் வரிகளை அப்படியே செலுத்தியாக வேண்டும். அடுத்த 2018 - 19 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் போது, இந்தப் பிரச்னைக்குறித்து விவாதித்து ஒரு தனி ப்ரொவிசனை (Budgetary Provision) உருவாக்கி ஜி.எஸ்.டி கவுன்சில் வழியாகச் செலுத்திய வரித் தொகையினை, மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கிய வரிச் சலுகையைக் காட்டி மீண்டும் பெறலாம். எக்காரணத்தை முன்னிட்டும், மாநில அரசுகள் அளித்த வரிச் சலுகைகளைக் காரணம் காட்டி ஜி.எஸ்.டி செலுத்தாமல் இருக்க முடியாது.

 தகவல்கள் உதவி: ஜி.கார்த்திகேயன், ஆடிட்டர், கோவை.