`நிர்வாணப் போராட்டம் தவிர எங்களுக்கு வேற வழி தெரியல’ - கலங்கும் அய்யாக்கண்ணு!

துரை.நாகராஜன்
சுற்றுச்சூழல்

டெல்லியில், விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற தமிழக விவசாயிகள், டெல்லி ரயில் நிலையத்தில்  மறியல் செய்தும், பின்னர் அரை நிர்வாணத்துடன் ஊர்வலம் சென்றதும் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் மாபெரும் போராட்டத்தை அகில இந்திய கிஷான் சங்கம் ஒருங்கிணைக்கிறது. இன்றும் நாளையும் நடக்கும் இப்போராட்டத்தில், நாட்டின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் 207 சங்கங்களைச் சேர்ந்த 30 லட்சம் விவசாயிகள் திரண்டு வந்து டெல்லியை அதிரவைக்க இருக்கின்றனர்.

தமிழகத்திலிருந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், விவசாயிகள் டெல்லி சென்றுள்ளனர். இன்று காலை, டெல்லி ரயில் நிலையத்தில் வந்திறங்கிய தமிழக விவசாயிகள், அங்கேயே ரயில் மறியல் செய்தனர். பின்னர், போலீஸாரால் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, ரயில்வே ஸ்டேஷன் முதல் ராம்லீலா மைதானம் வரை அரைநிர்வாணமாக, மண்டைஓடு, எலும்புகளுடன் ஊர்வலமாகச் சென்றனர். மைதானத்தில் இருந்த அய்யாக்கண்ணுவிடம் பேசினோம்.

"டெல்லியில் காலையில் இறங்கியதும் இரண்டு மணிநேரம் ரயில் மறியல் செய்தோம். சுமார் 1 மணிநேரம் ரயில் மறியல் நடந்தது. பிறகு எங்களுக்கும் காவல்துறைக்கும் வாக்குவாதம் நடந்தது. அதற்குப் பின் கோவணத்தோடும், மண்டை ஓடுகளோடும் டெல்லியைச் சுற்றி ஊர்வலம் வந்தோம். இப்போது ராம்லீலா மைதானத்தில் இருக்கிறோம். இங்கேயும் போராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். தமிழகத்திலிருந்து சுமார் 1,300 விவசாயிகள் கலந்துகொண்டிருக்கிறோம். 29 மாநிலங்களில் இருந்து விவசாயிகள் கலந்துகொண்டிருக்கிறார்கள். சுமார் 1 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். 

இப்போது என்ன காரணங்களுக்காகப் போராட்டம் நடத்துகிறீர்கள்... உங்கள் கோரிக்கைகள் என்ன? 

நாளைக்குள் எங்களுக்கு கடன் தள்ளுபடியும், லாபகரமான விலையும் கொடுக்க வேண்டுமென்று கேட்டுத்தான் இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். கடந்த முறை இதேபோல போராட்டத்தை நடத்தினோம். அதில் தமிழக விவசாயிகள் மட்டும் இருந்தனர். இப்போது இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் சேர்ந்து நடத்தும் போராட்டமாக மாறியிருக்கிறது.

1970ல் ஒரு டன் கரும்பு 90 ரூபாய். அன்று ஆசிரியர் சம்பளம் 90 ரூபாய். இன்று ஆசிரியருக்கு 70 ஆயிரம் ரூபாய் சம்பளம். என் கரும்புக்கு 2,500 ரூபாய்தான். அதையும், அறுத்து மூன்று மாதங்களாகியும் கரும்புக்குப் பணம் தரவில்லை. அன்றைக்கு 60 கிலோ நெல் 40 ரூபாய். அன்றைக்கு எம்.எல்.ஏ சம்பளம் 250 ரூபாய். நெல்லைவிட எம்.எல்.ஏ சம்பளம் 6 மடங்கு அதிகமாக இருந்தது. வங்கி மேலாளர் சம்பளம் 150 ரூபாய்தான். நெல்லைப் போல 4 மடங்குதான் சம்பளம் இருந்தது. இன்றைக்கு, நெல் 900 ரூபாயிலிருந்து  1000 ரூபாய் வரைக்கும் போகிறது. நெல்லைவிட 4 மடங்கு அதிகமா இருந்த வங்கி மேலாளருக்கு இன்றைக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சம்பளம். அப்போது நெல் 30 ஆயிரம்தானே இருக்க வேண்டும். விவசாயத்தில் இதுதான் இன்றைக்கு நடக்கிறது. நாங்கள் அந்த அளவுக்கு அதிகமா வேண்டும் என்று கேட்கவில்லை. அவங்களுக்கு 100 ரூபாய் கொடுத்தால், எங்களுக்கு 10 ரூபாயாவது கொடுக்க வேண்டும் என்றுதான் கேட்கிறோம். ஆனால், அரசு ஒரு ரூபாய் கொடுக்கிறது. விவசாயிகள் நாங்கள் எப்படி நிம்மதியாக வாழ முடியும். 

அதேபோல, எம்.எஸ்.சுவாமிநாதன் அரசாங்கத்துக்கு ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார். அதில், 'விவசாயி ஒரு ஏக்கர் நிலத்தில் 30 ஆயிரம் ரூபாய் செலவுசெய்து பயிரை விளையவைத்தால், அவருக்கு 15 சதவிகிதம் விலை கூடுதலாக வைத்து விவசாயிக்கு லாபம் கிடைக்குமாறு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போதுதான் விவசாயிக்கு லாபம் கிடைக்கும்' என்று சொல்லியிருக்கிறார். அதையும் அரசாங்கம் செய்யவில்லை. இதுபோக, மோடி ஆட்சிக்கு வரும்போது விவசாயிகளுடைய லாபத்தை இரண்டு மடங்கா உயர்த்தப்போகிறேன் என்று சொன்னார். ஆனால் அடுத்த வருஷம் ஆட்சியே முடிந்துவிடும், இன்னும் அதிகரித்தபாட்டைக் காணோம். 

இதற்கு முன், தமிழக விவசாயிகள் மட்டும் போராடினோம். இப்போது, இந்தியா முழுக்க இருந்து விவசாயிகள் வருகிறார்கள். ரயில் மறியல் செய்தது தமிழக விவசாயிகள்தான். மத்திய அரசு நாளைக்கு லாபகரமான விலையும், கடன் தள்ளுபடியும் அறிவிக்கவில்லை என்றால்,100 விவசாயிகளுக்கு மேல் நிர்வாணமா ஊர்வலம் போக இருக்கிறோம். அப்போதுதான் எல்லோரும் விவசாயிகளைப் பற்றித் தெரிந்துகொள்வார்கள் என நினைக்கிறேன். இதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை" என்றார்.