``எங்கள் சடலங்கள் மீது ஏறி சபரிமலை செல்லுங்கள்’- திரிப்தி தேசாய்க்கு வலுக்கும் எதிர்ப்பு

எம்.குமரேசன்
அரசியல்

பரிமலை செல்வதற்காக கொச்சி வந்திறங்கிய பெண் போராளி திரிப்தி தேசாய் போராட்டக்காரர்கள் முற்றுகையால் விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார். 

சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பை அமல்படுத்தக் கேரள அரசு முயன்றாலும் பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் சபரிமலைக்குப் பெண்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மகரவிளக்கு காலத்தையொட்டி சபரிமலை கோயிலில் நேற்று மீண்டும் நடை திறக்கப்பட்டுள்ளது. இதுவரை, 800-க்கும் மேற்பட்ட பெண்கள் சபரிமலை செல்வதற்கு ஆன்லைனில் புக் செய்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில், பிரபல சமூக செயற்பாட்டாளர் திரிப்தி தேசாய் சபரிமலை செல்ல புனேவில் இருந்து இன்று அதிகாலை 5 மணியளவில் கொச்சி வந்திறங்கினார்.  

திரிப்தி தேசாய் கொச்சி வந்ததையடுத்து ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் விமானநிலையத்தில் குவிந்தனர். 'எங்கள் சடலங்கள் மீது ஏறிதான் திரிப்தி தேசாய் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல முடியும்' என்றும் அவர்கள் கோஷமிட்டனர். கொச்சியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அவரை தங்க வைக்கப் போவதாக போராட்டக்காரர்களிடம் போலீஸார் தெரிவித்தனர். ஆனால், விமானநிலையத்தை விட்டு திரிப்தி வெளியே வர போராட்டக்காரர்கள் அனுமதிக்கவில்லை. 

விமான நிலையத்தில் ஏ.என்.ஐ செய்தியாளரிடம் பேசிய திரிப்தி தேசாய், 'சபரிமலை செல்லாமல் நான் திரும்பிப் போகமாட்டேன். என்னைப் பக்தர்கள் தடுக்கவில்லை. குண்டர்கள்தான் தடுக்கின்றனர் 'என்று தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் சபரிமலைக்குப் பெண்கள் செல்ல அனுமதி அளித்தாலும் இன்று வரை ஒரு பெண் கூட மலை ஏறி சாமி தரிசனம் செய்தது இல்லை. மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஷிக்னாபூர் சனி பகவான் கோயிலுக்குள் பெண்கள் செல்லத் தடை இருந்தது. திரிப்தி தேசாய் தலைமையில் நடந்த தொடர் போராட்டம் காரணமான அந்தத் தடை விலக்கப்பட்டது.