“காசுக்கு ஆசைப்பட்டு வேலைய விட்டேன்... ஆனா, இப்போ காடுதான் என் குலசாமி!” - ‘யானை’ ராமசாமி #VikatanExclusive

இரா.கலைச் செல்வன்
அரசியல்

அந்தப் பாட்டிக்கு உண்மையிலேயே "கிளி" மூக்கு. நல்ல கறுத்த தேகம். பொக்கை வாய். தார்ச்சாலை இல்லாத அந்த மண் சாலையில், பேருந்து "டக டக" வென சத்தத்தோடு, பெரும் புழுதியைக் கிளப்பிக்கொண்டு போனது. திடீரென அந்த மண்ணைச் சரித்தவாறு வண்டி நின்றது. நாம் சுதாரித்துப் பார்ப்பதற்குள், பாட்டி ஜன்னல் வழியே எட்டிப்பார்த்துவிட்டு. 

"மலைப் பாம்பு போகுதுங்க..." என்றார். 

அந்த மண்ணில் நெளிவான கோடுகளை இழுத்தபடியே, அந்த மலைப்பாம்பு மெதுவாக ஊர்ந்து சென்றது. மீண்டும் "டக டக" பயணம் தொடர்ந்தது. ஒன்றரை மணி நேரப் பயணம் அந்தப் பெரும் பள்ளத்தாக்கிலிருந்த "மோயாறு" ஆற்றின் கரையோரம் வந்து முடிந்தது. 

"சார்...நம்ம தெங்குமரஹடா வந்துட்டோம். இறங்குலாமுங்க" என்று சிரித்த முகத்தோடு நம்மை எழுப்பினார் ராமசாமி. சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் இவர் "யானை" ராமசாமி. 

மோயாறு ஓடையைக் கடக்க வேண்டும். அக்கரையில் மூன்று பரிசல்கள் நின்றுகொண்டிருந்தன. ராமசாமி சில நொடிகள், ஆற்றின் நீரோட்டத்தைக் கவனித்தார். சுற்றியும் பார்த்தார். 

"சார்...ஓட்டம் கம்மியாத்தான் இருக்கு. நடந்தே போயிடலாமுங்க. அந்த பேன்ட மட்டும் முழங்கால் அளவுக்கு தூக்கிவிட்ருங்க" என்று சொன்னபடி நம் கையிலிருந்த பைகளை எல்லாம் வாங்கி சுமந்தபடி, நமக்கு வழிகாட்டிக் கொண்டே அந்த ஓடையில் இறங்கி நடக்கத் தொடங்கினார். 

சுற்றிலும் மலை. ஓடையிலிருந்து நிமிர்ந்துப் பார்த்தால் வானமே தெரியாத அளவுக்கு மரங்கள் இரு கரைகளிலும் நெடிந்து வளர்ந்திருந்தன. பச்சை வாசனை நமக்கு அதிக பழக்கமற்ற அந்தப் புதிய உலகத்துக்குள் நம்மை இழுத்தது. இனி ராமசாமியின் கைகள் பிடித்துதான் நடக்க வேண்டும். இந்தக் காட்டைப் புரிந்துகொள்ள, இந்த மலைகளைப் படிக்க, இயற்கையின் இயல்புகளை உணர, யானைகள், புலிகள், கரடிகள், நரிகள், மான்கள், ஓநாய்கள் என வனவிலங்குகளின் நடமாட்டங்களைத் தெரிந்துகொள்ள, அவை தங்களை தற்காத்துக் கொள்ள நம்மைத் தாக்கும்பட்சத்தில் நம்மை நாம் தற்காத்துக் கொள்ள ராமசாமியின் கைகளை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும். ஆம்... மேற்குத் தொடர்ச்சி மலைகளின் நீள, அகலங்களை தன் கால்களால் அளந்து, யானை, புலிகளின் மொழி புரிந்து அவற்றோடு உரையாடி "வன வழிகாட்டுதலை" தன் வாழ்வாகக் கொண்டவர் "வன வழிகாட்டி" (Forest Tracker) இந்த ராமசாமி. 

அரை மணி நேர நடையில் தெங்குமரஹடா வன கிராமத்தை அடைந்தோம். அங்கு ஒரு குன்றின் உச்சியிலிருந்தது ராமசாமியின் வீடு. அங்கு போய் நம் உடைமைகளை வைத்துவிட்டு, உடைகளை மாற்றிவிட்டு, அந்த அடர்ந்த காட்டுக்குள் செல்லத் தயாரானோம்.

நான்கைந்து தெருக்கள் இருந்த அந்தக் கிராமத்தை சில நிமிடங்களில் கடந்துவிட்டோம். ஒரு பெரிய ஆலமரத்தின் அருகே நின்றார் ராமசாமி.

"இங்கதாங்க... ஒத்த யானை ஒண்ணு இந்த மரத்துக்குப் பக்கத்துல இருக்குற நிலத்துக்குள்ள புகுந்துடுச்சு. தோட்டத்துக்குக் காவல் இருந்தவன் அதை விரட்ட கையிலிருந்த தீப்பந்தத்த வெச்சு அத பயமுறுத்தி விரட்டினான். தொடர்ந்து மூன்று நாள்கள் அந்த யானையும் அப்படியே வந்து நின்னுருக்கு, இவனும் அத இப்படியே விரட்டிட்டு இருந்துருக்கான். அதுல ஒண்ணு, ரெண்டு சமயம் பந்தத்த வெச்சு யானைத் தோலை பொசுக்கியிருக்கான். அதுவும் அமைதியாகவே இருந்திருக்கு. கடைசி நாளும் இப்படியே நடக்க, வழக்கமா போற மாதிரி அந்த யானையும் பள்ளத்துல இறங்கிடவும், இவன் திரும்ப தோட்டத்துக்கா நடந்து வந்திருக்கான். அப்போ, திடீர்னு ஓடி வந்த யானை அவன தூக்கி பிச்சு எறிஞ்சிடுச்சு. அவ்வளவு கோபத்தையும் அடக்கிட்டு இருந்திருக்கு. ஒரு கட்டத்துல அவன் உயிரையே வாங்கிடுச்சு. யானைங்க அப்படித்தான்... பாசத்துக்குப் பாசமாகவும், விரோதத்துக்கு விரோதமாகவும் நடந்துக்கும்." என்று அவர் சொல்லி நடக்கவும், சில நொடிகள் அந்த மரத்தையும் தோட்டத்தையும் பார்த்தபடியே நாம் நின்றோம்.

"இது எப்போ நடந்தது ண்ணா?"

"அது நடந்து ஆச்சுங்க தம்பி...வருஷம் 20 ஆச்சு"

"ஹோ... நீங்க எத்தனை வருஷமா இந்த வேலைய செய்திட்டு வர்றீங்க?"

சில நிமிடம் யோசிக்கிறார். சில மனக் கணக்குகளை முடித்துவிட்டு,

"இதோட 36 வருஷமாச்சு" என்று சொன்னார். பின்னர் நாம் ஏதும் கேட்கும் முன்பே தன் கதையைத் தொடர்ந்தார்...
"நாங்க பழங்குடிகள் கிடையாது. ஆனால், 3 தலைமுறையாவே இந்தக் காட்டுக்குள்ளதான் இருக்கோம். எப்படி வந்தோம், ஏன் வந்தோமுங்குற விவரமெல்லாம் தெரியலைங்க. ஆனா, காடுதான் ஜீவனம். எங்க அப்பாரு காலத்துல காட்டுக்குள்ள போய் கிழங்கு பறிக்கிறது, சாப்பாட்டுக்கு விலங்குகள வேட்டையாடுறதுன்னு அப்படியே ஒரு வாழ்க்கை. வெளிய ஒரு உலகம் வேற மாதிரி இயங்குதுங்குற அறிவெல்லாம் கிடையாது. காடு, மலை, ஆறு, மரம், புலி, யானை, கரடி, முயல், முதலை இதுங்கதான் நமக்குத் தெரிஞ்ச உலகம். அப்புறம் அப்படியே காலம் மாறுது, சட்டதிட்டங்கள் மாறுது...நம்ம வாழ்க்கையும் மாறுது..." என்று சொல்லிக் கொண்டிருந்தவர் ஒரு நொடியில் மீண்டும் நிகழ்காலத்துக்குள் வந்தார். சற்று தள்ளி தெரிந்த மலையைக் காட்டி,

"அந்த மலைக்குப் பேரு அல்லிராணி கோட்டைங்க... திப்பு சுல்தானுக்கு பயந்து அந்தக் காலத்துல அல்லிராணி தப்பிச்சு வந்து, ஒளிஞ்சு வாழ்ந்த மலை. அந்தப் பக்கமா ஒரு 4 மணிநேரம் நடந்தோம்னா கோத்தகிரி மலைக்கு ஏறிடலாம். ஆனா, அங்க போக நமக்கு நேரமிருக்காது. அந்தப் பக்கம் புலிங்களும் அதிகம். நாம் முத இந்த மலையில ஏறலாம்..." என்று சொன்னபடி கையிலிருந்த அந்தக் கத்தியைக் கொண்டு முட்புதர்களை வெட்டி நமக்கான வழியைச் சீர் செய்தபடி நடக்கத் தொடங்கினார். அப்படியே தன் கடந்த காலத்துக்குள்ளும் நுழைந்தார்.

"எல்லாம் மாறிடுச்சு. ஆனா, காட்ட தவிர வேற ஒண்ணும் தெரியாது. சரின்னு அப்படி, இப்படி படுத்து, புரண்டு ஒருவழியா வனத்துறையில ஒரு வேலையில சேர்ந்துட்டேனுங்க... சம்பளம்ன்னு சொன்னா ஒரு இருநூறு ரூபா வந்துட்டுருந்துச்சு. அப்புறம் நிறைய, வெளிய ஊர்ப்பக்கம் வர ஆரம்பிக்கவும், பணத்து மேல பெரிய ஆசை வந்துடுச்சு. நிறைய பணம் சம்பாதிச்சா, நல்லா இருக்கல்லாமுன்னு நினைச்சேன். அப்போதான் சரியா... காட்டுல ஆராய்ச்சி பண்ண சிவக்குமார்ன்னு ஒருத்தர் வந்தார். அவரு ஆயிரங்கள்ல சம்பளம் தர்றேன், நீ எனக்கு வழிகாட்டியா வந்திடுன்னு சொன்னாரு. சரின்னு நானும், பாரஸ்ட் வேலைய ராஜினாமா பண்ணிட்டு அவரோட போயிட்டேன். அப்படித்தான் தொடங்குச்சு, இந்த வேலை. அப்புறம் ஆராய்ச்சி படிப்பு படிக்குற மாணவர்கள் வர்ற ஆரம்பிச்சாங்க... அவங்களுக்கு வழிகாட்டுறதுன்னு அப்படியே அமைஞ்சிடுச்சு. ஆனா, கொஞ்ச நாள்லயே இந்தக் காசு, பணமெல்லாம் நமக்கு எந்த சந்தோஷத்தையும் கொடுக்காதுங்குறத புரிஞ்சுக்கிட்டேன். காடு தான் சார்... இந்தக் காட்டுல தான் என்னோட மொத்த உசுரும் இருக்கு. இப்பவும், 20 ஆயிரம் தர்ரேன், 30 ஆயிரம் தர்ரேன் காட்ட சுத்திக்காட்டுங்கன்னு ஆளுங்க வருவாங்க. ஆனா, பணத்தாசை பட்டு அப்படியான ஆட்கள் கூடவெல்லாம் போறதில்ல. காட்டுக்குள்ள வர்றங்க, ஒண்ணு காட்டப் புரிஞ்சுக்கற நேசத்துல இருக்கணும், இல்ல ஆராய்ச்சி, படிப்புன்னு படிச்சு உபயோகமா ஏதாச்சு பண்ணனும்..." என்று அவரின் கதைகளைக் கேட்டு முடிக்கும்போது பாதிமலையைக் கடந்து விட்டிருந்தோம். அந்தப் பாறையில் உட்கார்ந்து சிறிது நேரம் ஓய்வெடுத்தோம்.

தன் சட்டையைக் கழற்றிவிட்டு அந்த ஈரக்காற்றை அனுபவித்தார் ராமசாமி. தன் வாயிலிருந்து சில சங்கேத சத்தங்களை எழுப்பினார். அதற்குப் பதில் மொழியாக சில பறவைகளின் சத்தம் கேட்டது. இப்படியாக பல ஆச்சர்யங்களோடு இரவு நெருங்கும் வரை அந்த வனப் பயணம் தொடர்ந்தது. 

தூறல் தொடங்கி பெரும் மழை பிடிக்கும் நேரம், நாம் ராமசாமியின் வீட்டுக்குள் நுழைந்தோம். பசி எடுக்கத் தொடங்கியிருந்தது. 

"சார்... இருக்குற வாழைப்பழத்த சாப்பிடுங்க. இந்தா களிய கிண்டிடுறேன்..." என்றபடி ராகி களி தயாரிக்கத் தொடங்கினார். அந்தக் குண்டு பல்பு வெளிச்சத்தில் கண்ணை மிசுக்கி, மிசுக்கி பார்த்தபடியே இருந்தார்.

"இந்தக் கண்ணு தான் சார் பிரச்னை. போன வருஷம் திடீர்னு பார்வை மங்கிப் போயிடுச்சு. என்ன, ஏதுன்னே தெரில. எங்கப் போய் பார்க்குறதுன்னே தெரில. எத்தனையோ பேருக்கு இந்தக் காட்டுக்குள்ள எவ்வளவோ வேலைகளை செய்திருக்கேன். ஆனா, வேலை முடிச்சு போர்றவுங்க திரும்ப நமக்கு ஒரு போன் கூட பண்ணிட மாட்டாங்க. நாம பண்ணாலும் டப்புன்னு வெச்சிடுவாங்க.. பாவம் ஊர்ல அவங்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும். அப்புறம் கோயமுத்தூர்ல டால்ஸ்டாய்ன்னு ஒரு டாக்டர். அவர்தான் என்னை அங்க கூட்டிப் போய், மருத்துவம் பார்த்து... இப்போ தேவலை சார்.." என்று தன் வருத்தத்தை குறையாகயில்லாமல், யதார்த்தமாகச் சொன்னார். 

மழை பெரிதாக பெய்யத் தொடங்கியது. அந்த சத்தத்தை மீறி ராமசாமியின் குரல் கேட்கவில்லை. அவரும் அதன்பின் அதிகம் பேசவில்லை. சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றோம். நமக்கான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துவிட்டு, கட்டாந்தரையில் ஒரு ஓரமாய் சுருண்டுப் படுத்துக் கொண்டார் ராமசாமி. வெளியே தொலைவில் யானை பிளிறும் சத்தம் கேட்டது...