நடிகர் சங்கத்திலிருந்து திலீப் நீக்கம்! - மன்னிப்புக் கோரினார் மோகன்லால்

சிந்து ஆர்
அரசியல்

லையாள நடிகர் சங்கத்தில் திலீப் இப்போது இல்லை என்றும் நடந்த சம்பவங்களுக்கு மன்னிப்பு கோருவதாகவும் 'அம்மா' தலைவர் மோகன்லால் தெரிவித்தார்.

மலையாள முன்னணி நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நடிகர் திலீப் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'விலிருந்து திலீப் நீக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த மாதம் நடிகர் சங்கத் தலைவராக மோகன்லால் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் திலீப் மீண்டும் 'அம்மா'வில் சேர்க்கப்பட்டார். இதற்கு நடிகைகள் கூட்டமைப்பான டபிள்யூ.சி.சி, கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நடிகை ரம்யா நம்பீசன்  மற்றும் பாதிக்கப்பட்ட நடிகை உட்பட 4 நடிகைகள் நடிகர் சங்கத்தைவிட்டு விலகினர். மேலும், தமிழ் நடிகைகள் ரேவதி தலைமையில் நடிகர் சங்க கூட்டத்தை மீண்டும் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

இளம் நடிகர்கள் பலரும் நடிகைகளுக்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து மலையாள நடிகர் சங்கம் இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் திலீப் நடிகர் சங்கத்துக்கு எழுதிய கடிதத்தில், ``நான் நிரபராதி என நிரூபிக்கும் வரை நடிகர் சங்கத்தில் செயல்பட விரும்பவில்லை. நான் இந்த வழக்கிலிருந்து நிரபராதியாகி வெளியே வருவேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் பிரச்னை ஓய்ந்தபாடில்லை. இவ்வளவு களேபரத்துக்கு மத்தியிலும் வாய்திறக்காமல் மெளனியாக இருந்த மோகன்லால், இன்று மெளனம் கலைத்து மீடியாக்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ``திலீபை நடிகர் சங்கத்தில் சேர்ப்பதுகுறித்து பொதுக்குழுவில் தீர்மானம் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கிருந்த எந்த நடிகையும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் நடிகை ரம்யா நம்பீசன் ஆகியோரது ராஜினாமா கடிதங்கள் மட்டுமே எங்களுக்கு வந்துள்ளன. அடுத்த பொதுக்குழு கூட்டப்பட்டபிறகுதான் அவர்களை மீண்டும் சேர்ப்பதுகுறித்து முடிவுசெய்யப்படும். மீண்டும் பொதுக்குழு நடத்துவதுகுறித்த நடிகைகளின் கோரிக்கை பரிசீலிக்கப்படும். திலீப் இப்போது நடிகர் சங்கத்தில் இல்லை. திலீபை நடிகர் சங்கத்தில் இணைத்ததை அடுத்து சங்கத்தில் பிளவு ஏற்படுத்தும் முயற்சிகள் நடந்தன. இந்த விவகாரத்தில் நான் மீடியாக்களைச் சந்தித்து கருத்துக் கூறாமல் மெளனமாக இருந்ததற்கு மன்னிப்பு கோருகிறேன்" என்றார்.