கீழவெண்மணி... தமிழகத்தை உலுக்கிய 'ரத்த சரித்திரம்'

Vikatan Correspondent
அரசியல்

மிழத்தில் கூலி உயர்வு கேட்டு போராடிய தொழிலாளர்கள், உயிருடன் தீயில் கொளுத்தப்பட்டு கொல்லப்பட்ட தொழிலாளர் தியாகிகளின் நினைவு தினம் இன்று.

தற்போதைய நாகை மாவட்டத்தில் அமைந்துள்ளது கீழவெண்மணி. ( தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான பழைய தஞ்சை மாவட்டத்தில் முன்னர் இருந்தது.)  தமிழகத்தின் 30% விளைநிலங்களை தன்னகத்தே கொண்டு அமோக விளைச்சல் தரும் பூமி. இப்பூமியில் எங்கு சுற்றினும் பச்சை பசேலேன பசுமை போர்த்திய நெற்பயிர்கள். சில்லென்று வீசும் காற்று, தென்னந்தோப்பு, கரும்புத் தோட்டம் என மனம் வருடிச் செல்லும் இயற்கை சூழல். இங்கு பலதரப்பட்ட நிலமில்லா மக்களும், கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். 

இவர்கள் நல்ல வாழ்க்கை முறையை அடைய முயற்சி செய்தும் அதை நிலக்கிழார்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 1960களில் தஞ்சையில் பண்ணையார்கள், நிலச்சுவான்தார்கள் ஆதிக்கம் வேருன்றி மரமாக வளரத் தொடங்கியிருந்த காலம். பண்ணையார்களிடம்தான் அதிக நிலமும் பணமும் இருந்தது. பண்ணையார்களிடம் வேலை செய்து தங்கள் வாழ்கையை நகர்த்திச் சென்ற கூலித் தொழிலாளர்களை பண்ணையார்கள் தங்கள் அடிமைகளாகவே கருதினர். குறைந்த கூலிக்கு அதிக வேலை வாங்கினார்கள். ஐயா, ஆண்டை என்றுதான் அழைக்க வேண்டும். குறைந்த கூலி, அதுவும் அணாவாக கிடையாது (ஒரு படி நெல்லும் கேப்பை கூழும்தான்) சம்பளம்.

பண்னையார்கள் தொழிலாளர்களிடம் இரக்கமில்லாமல் வேலை வாங்கினர். வயலில் நடவு நடும் பெண்,  ஒருமாதம் முன் பிறந்த தன் பச்சைக் குழந்தையை அங்குள்ள மரத்தில்,  சேலையை கட்டி கிடத்திவிட்டு வேலைசெய்வார். அந்த குழந்தை பசியில் அழுதால் கூட வேலையை முடிக்காமல் பால் கொடுக்கச் செல்லக் கூடாது. மீறினால் வேலை கிடையாது அன்று. சில நேரங்களில் பால் கொடுக்கும் தாயின் மார்பில் எட்டி உதைவிட்டுவிட்டு செல்வர். அங்குள்ள பெண்களை தவறாக அணுகிய சம்பவங்களும் நடந்ததுண்டு.

எதிர்த்தால் கட்டி வைத்து அடித்து உதைதான். ஆபாச வார்த்தை அர்ச்சனைகளால் பெண்கள் கூனிக் குறுகிவிடுவர். எதிர்த்தால் பிழைப்பு கெட்டுவிடும். ஒரு பண்ணையாரிடம் முறைத்துக்கொண்டு மற்றொருவரிடம் செல்ல முடியாதபடி பண்ணையார்கள் தங்களுக்குள் நல்ல பிணைப்பை உருவாக்கி வைத்திருந்தனர். சாணிப்பால், சவுக்கடி இவையெல்லாம் சர்வசாதாரணமான தண்டனைகள் அங்கே.

இந்த நிலையில்தான் 1960களில் இந்திய - சீனப் போரால் பஞ்சம் தலைவிரித்தாடியது. இது கீழவெண்மணி கிராமத்தையும் விட்டுவிடவில்லை. பஞ்சத்தால் குறைந்த கூலியுடன் பிழைப்பை நடத்த முடியாது என்பதால் கூலி உயர்வு கேட்டனர் தொழிலாளர்கள். ஆனாலும் பயனில்லை. இவர்களுக்காக விவசாய தொழிலாளர் சங்கத்தை ஆரம்பிக்கின்றனர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மணியம்மை மற்றும் சீனிவாசராவ். இதில் இணைந்து தங்களுக்கு கூலி உயர்வு கேட்டனர் தொழிலாளர்கள். இவர்களுக்கு போட்டியாக நெல் உற்பத்தியாளர் சங்கம் என்ற சங்கத்தை ஆரம்பிக்கின்றனர் நிலக்கிழார்கள்.

தொழிலாளர்கள் கூடுதலாக கேட்கும் அரை படி நெல்லை தருவதற்கு மனமில்லை. உழைப்புக்கு ஏற்ற கூலி கொடுக்காமல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றது. ஆனாலும் நேற்று வரை நமக்கு கீழ் கைகட்டி வாய்பொத்தி வேலை பார்த்தவர்கள்,  நமக்கு எதிரே அமர்ந்து நம்மிடமே பேச்சுவார்த்தை நடத்துவதா என்ற பெருங்கோபம் சம்பந்தப்பட்ட பண்ணையார்களிடம் கனன்று வந்தது. 'எங்களுக்கு எதிராக சங்கம் ஆரம்பிக்கிறீங்களா..?' என்று கீழவெண்மணியை சேர்ந்த முத்துகுமார், கணபதி இருவரை கட்டிவைத்து அடித்தனர். இதை எதிர்த்து தொழிலாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதனால் கீழவெண்மணியில் கலவரம் மூண்டது.

1968 டிசம்பர் 25 அன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்க,  கீழவெண்மணி மக்களுக்கோ அன்று  இருண்ட நாளாக அமைந்தது.

'தனக்கு அடிமையாக இருந்தவர்கள் தன்னை எதிர்ப்பதா?' என்று ஆத்திரம் கொண்ட பண்ணையார் கோபாலகிருஷ்ணன் என்பவர், தனது அடியாட்களுடன் பெட்ரோல் கேன்கள், நாட்டுத் துப்பாக்கி சகிதம் வந்திறங்கினார். அவர்களுக்கு போலீசாரும் துணை நின்றனர். அவர்கள் முன்னிலையில் அந்த கொடிய சம்பவத்தை அரங்கேற்றினர். காட்டில் மிருகம் வேட்டையாடப்படுவது போல் கண்ணுக்கு கிடைப்பவர்கள் எல்லாம் சுடப்பட்டனர்.

இப்படி சுடப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 10 பேருக்கு மேல் இருப்பார்கள். இதனைக்கண்டு பயந்து நாலா மூலைக்கும் சிதறி ஓடி, வாய்க்கால் வரப்புகளில் ஒடி ஒளிந்துகொண்டனர் தொழிலாளர்கள். அனைத்து குடிசைகளும் எரிக்கப்பட்டன. நிராயுதபாணியாக நிற்கும் அப்பாவி பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் உயிரைக் காத்துக்கொள்ள தெரு மூலையில் உள்ள ராமையா என்பவரின் சிறிய கூரைவீட்டில் ஓடி ஒளிந்தனர். வெறிபிடித்து அலைந்தவர்கள் அந்த வீட்டை கண்டுபிடித்து வீட்டை வெளியே தாழிட்டு பெட்ரோலை ஊற்றி எரிக்கின்றனர்.

பூட்டிய வீட்டுக்குள் பெரும் அலறல் சத்தம் எழுந்தது. 'ஐயோ, அம்மா ஆ...ஆ....எரியுதே!' என்ற சத்தம் மட்டும் திரும்ப திரும்ப கேட்கிறது. தான் பிழைக்காவிட்டாலும் தன் குழந்தையாவது பிழைக்கட்டும் என்று ஒரு பெண் தன் குழந்தையை தூக்கி எறிகிறார். கொடூரர்கள் குழந்தை என்றும் பாராமல் வெட்டி வீழ்த்தி தீயில் எரித்தனர். வெளிய வர முயற்சித்தவர்களை மறுபடியும் உள்ளே தள்ளினர்.

வெளியில் நின்று அழுத மூன்று பிஞ்சுக் குழந்தைகளையும் தீயின் உள்ளே தள்ளினர். தீயின் கோர நாக்குகளுக்கு சற்று நேரத்தில் 20 பெண்கள், 19 குழந்தைகள், 6 ஆண்கள்  என 44 உயிர்கள் தீக்கிரையானது. ஒரு பெண் தனது மகளையும் சேர்த்து கெட்டியாக அணைத்துக் கொண்டு கருகியிருந்தார்.

மறுநாள் தினசரிகளில் கிழவெண்மனி படுகொலை சம்பவம்தான் தலைப்புச்செய்தி. நாடு முழுவதும் அதிர்வலைகள் உருவானது. தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டனர். சீன வானொலிகளில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்டன இச்செய்தி. இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. முதல் வழக்கில் தொழிலாளர்கள் 120 பேரின் மீதும் இரண்டாவது வழக்கில் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கு சரியான தண்டனை கிடைத்ததா...? இரண்டாவது வழக்கில் கோபாலகிருஷ்ணனுக்கும் அவருடைய  ஆதரவாளர்கள் 7 பேருக்கும் 10 வருடம் சிறைத் தண்டனை

மேற்முறையீட்டுக்காக வழக்குகள் உயர்நீதிமன்றம் சென்றன. முதல்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளர்களுக்கு ஜாமீன் மறுத்த நீதிமன்றம், கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரோடு சேர்ந்து தண்டனை பெற்ற 7 மிராசுதார்களுக்கும் ஜாமீன் வழங்கியது. அப்பாவி தொழிலாளர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

இது மட்டும்தானா...? இல்லை, இன்னும் இருக்கிறது. இறுதித் தீர்ப்பில் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு உயர் நீதிமன்றம் சொன்ன காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது தொழிலாளர்களுக்கு.

“இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவருமே நிலக்கிழார்களாக இருப்பது வியப்பாக உள்ளது. அவர்கள் அனைவரும்  பணக்காரர்கள். கவுரவமிக்க சமூக பொறுப்புள்ள அவர்கள் இந்த குற்றத்தை செய்திருக்க மாட்டார்கள் என நம்புகிறோம்” -இதுதான் தீர்ப்பு. ஒருவர் விடுதலையாவதற்கான தகுதி அவர் பணக்காரர். இந்த ஒரே காரணத்தை வைத்துக்கொண்டு அப்பாவி தொழிலாளர்களை, அவர்களின் குழந்தைகளை எரித்துக் கொண்றவர்களுக்கு தீர்ப்பு விடுதலை. இதுதான் அன்றைக்கு தொழிலாளர்களின் நிலை.

இந்த கொடூரத்தில் தப்பிப் பிழைத்தவர்களை பங்கேற்க வைத்து ஆவணப் பட இயக்குனர் பாரதி கிருஷ்ண குமார், 'ராமையாவின் குடிசை' என்ற ஆவனப்படத்தை இயக்கியுள்ளார்.

இது பல்வேறு அதிர்வலைகளை உருவாக்கியது. இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் நினைவாக கீழ வெண்மணியில் நினைவுத் தூண் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

- எழிலரசன் ( மாணவப் பத்திரிக்கையாளர்)