தண்ணீர் அடிப்படை உரிமையா... மதிப்பளிக்கப்பட்ட சரக்கா? - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 2

பெ.மதலை ஆரோன் & க.சுபகுணம்
சுற்றுச்சூழல்

கடந்த காலத்தின் தேக்கமே வரலாறு. மனித வாழ்வு மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்குமான அத்தியாவசியத் தேவையாக நீர் இருந்துவருகிறது. இதுவரை நாம் தேக்கி வைத்திருக்கும் மனித வரலாற்றின் ஒவ்வோர் அதிகாரத்திலும் நீர் இன்றியமையாத பங்குபெற்றிருக்கிறது. நைல் நதி நாகரிகம், சிந்துச் சமவெளி நாகரிகம், நமது காவிரியோரக் கலாசாரப் பண்பாட்டு வளர்ச்சி, சீனாவின் யாங்சி, மஞ்சள் நதிகளில் தோன்றிய நாகரிக வளர்ச்சி என அனைத்துமே நீரைச் சார்ந்த மனித வளர்ச்சியின் வரலாற்று அடையாளங்கள்.

விரைவான போக்குவரத்துக்கும் புவியின் அனைத்துப் பகுதிகளிலும் கால் பதித்து உலகளாவிய வணிகத்தைச் சாத்தியப்படுத்துவதற்கும் கடல்நீரே மூலமாக விளங்கியது. 16-ம் நூற்றாண்டில் கடல்நீரின் மேல் ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதிலேயே ஏகாதிபத்திய நாடுகள் கவனம் செலுத்தின. தொழிற்புரட்சி தொடங்குவதற்கு முன்வரையிலுமே, உலகின் சிறந்த சக்தியாக விளங்குவதற்கு நீரின் மீதான ஆதிக்கமே மூலமாகக் கருதப்பட்டது. நீர்நிலைகளிலும், நீரைக் கட்டுப்படுத்திப் பயன்படுத்துவதிலும் எந்த அரசு சிறந்து விளங்குகிறதோ அதுவே நாகரிக வளர்ச்சியில் உச்சத்தைத் தொட்ட அரசாங்கமாகக் கருதப்பட்டது. தொழிற்புரட்சிக்குப் பின்னர்கூட அப்போதிருந்து இப்போதுவரை உற்பத்தி செய்யப்படும் பொருள்களின்மீதும் நீர் மறைமுக ஆட்சி செலுத்தி வருகிறது. 

உற்பத்தியாகும் எந்தவொரு பொருளும் பல்வேறு மூலப்பொருள்களைத் தன்னுள் மறைத்துக்கொள்ளாமல் தயாராவது கிடையாது. அத்தகைய மூலப்பொருள்களில் முதலாவது தண்ணீர். விவசாயத்தில் தொடங்கி தொழிற்சாலைகள் வரை எதுவுமே நீரின்றி இயங்குவதில்லை. அவ்வாறு ஒரு பொருளில் மறைந்திருப்பதுதான் மறைநீர். ஒரு மனிதனின் வாழ்வாதாரத்துக்குத் தேவையான நீரை வழங்கவேண்டியது அடிப்படை மனித உரிமையாகும். அதுவே ஒரு பொருளுக்கான உற்பத்தியில் மறைமுகமாக ஆட்சி செலுத்தும் நீரை வழங்குவது எந்த வகையிலும் அடிப்படை உரிமையாகக் கருதப்படக்கூடாது. அங்கே அதுவும் ஒரு சரக்காகவே கருதப்பட வேண்டும். 

தண்ணீர் இரண்டு விதமாகப் பார்க்கப்படுகிறது.

1.) தண்ணீர் என்பது அடிப்படை மனித உரிமை. அதைச் சரக்காகக் கருதி விற்பனை செய்யக்கூடாது.

2.) உலகில் விளையும் உணவுப் பொருள்களும் அனைவருக்குமானதே. அவற்றுக்கு விலை நிர்ணயிக்கவில்லையா! அதைப் போலவே தண்ணீரையும் ஒரு சரக்காகவே கருத வேண்டும். அதற்கான மதிப்பினை வரையறுக்க வேண்டும். அப்போதுதான் நீண்டகால மற்றும் ஆற்றல்மிக்கப் பயன்பாட்டுக்கு வழிவகுக்கும்.

நீர் எல்லா சூழலிலும் அடிப்படை உரிமையாகவோ அல்லது எல்லா சூழலிலும் விற்பனைக்குரிய சரக்காகவோ கருதப்பட முடியாது. அதைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், வரலாற்றில் நீர் குறித்த வரி விதிப்புகளைச் சிறிது அலசுவோம்.

அது கி.மு முதல் நூற்றாண்டின் இறுதிக் காலம். தமிழகத்தைக் கரிகால சோழன் ஆண்டுகொண்டிருந்த சமயம். கல்லணையின் மூலமாக வான் பொய்த்தாலும் தான் பொய்யாக் காவிரி ஆற்றின் நீர் கடலில் கலப்பதைத் தடுத்து நாட்டு மக்களின் பயன்பாட்டுக்குத் திருப்பிவிடப்பட்டது. ஆனால், அது ஒன்றும் இலவசமாக நடந்துவிடவில்லை. அதைப் பயன்படுத்துவதற்குச் சில வரிகள் வசூலிக்கப்பட்டது. அவற்றை வசூலிப்பதற்கெனவே நீர் மேலாண்மைக் குழுக்களையும் அமைத்திருந்தார்கள்.

ஏரி, குளம் போன்றவற்றிலிருந்து நீரை எடுத்துப் பயன்படுத்துபவர்கள் அந்த நீர்நிலைகளைப் பராமரிப்பதற்காக அரசுக்கு வரி கட்டுவார்கள். அந்த வரியின் பெயர் `நீர் நிலைக் காசு'. விவசாயிகள், இரும்புத் தொழில் செய்யும் கருமார்கள், மண் பொருள்கள் செய்பவர்கள் போன்றவர்கள் இத்தகைய நீர்நிலைகளுக்கு அருகிலேயே இருப்பதால் அவர்களின் உற்பத்திப் பயன்பாடுகளுக்கு இந்த வரி விதிக்கப்பட்டது.

இந்த வரி அவர்கள் எடுக்கும் நீரின் அளவைக் கணக்கிட்டே விதிக்கப்படுகிறது. அதாவது, விவசாய நிலத்துக்கான நீர்வழித் தடத்தில் ஏரி நீர் எவ்வளவு நாழிகைகள் திறந்திவிடப் படுகிறது என்பதைக் கணக்கிட்டு அதற்கேற்ப வரிவிதித்தார்கள். அந்தக் கணக்குதான் `வட்டி நாழி'.
சில சமயங்களில் ஒரு கிராமத்தின் மொத்த நீர்நிலைகளும் யாரேனும் ஒருவரின் பராமரிப்பில் குத்தகைக்கு விடப்படும். அதைக் `குளவடை' என்றார்கள். சில பகுதிகளில் ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகளைப் பராமரிக்க வரி வசூலிப்பதைவிட அந்தக் கிராமத்தின் ஒரு நிலப்பகுதியை அரசு பெற்றுக்கொள்ளும். பெரும்பாலும் ஆறு அல்லது ஏரியின் பரப்பை விஸ்தரிப்பதற்கான திட்டங்களின்போது இந்த நடைமுறைகளைப் பின்பற்றுவார்கள். அப்படிப் பெறப்படும் நிலப்பகுதிகளை `ஏரிப்பட்டி' என்றனர்.

நீருக்கான வரியைப் பணமாகச் செலுத்தாமல் பயன்படுத்திய நீரின் மூலமாகக் கிடைத்த உற்பத்தியின் ஒரு பகுதியைத் தருவதே `ஏரியாயம்'. அரசுக்குச் சொந்தமான நீர்நிலைகளில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் உள்ளூர் மீனவர்கள் `ஏரி மீன்' என்ற பெயரில் வரி செலுத்தினார்கள். அதேசமயம் சுத்தமான நன்னீர் குளங்களும் மக்களின் குடிநீருக்கெனப் பிரத்யேகமாகப் பராமரிக்கப்பட்டுள்ளது. அதற்கெனச் சிறு அளவில் `செந்நீர் பொதுவிளை' என்ற பெயரில் வரி வசூலிக்கப்பட்டது.

நீருக்கெனப் பிரத்யேகமாக வசூலிக்கப்பட்ட வரிப்பணம் முழுவதும் நீர்நிலைகளின் பராமரிப்புக்கும் அவற்றை மேம்படுத்துவதற்குமே செலவிடப்பட்டது. ஆனால், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக விநியோகிக்கப்பட்ட தண்ணீருக்கு எந்த வரியும் விதிக்கப்படவில்லை. நன்னீருக்கான வரிகூட பராமரிப்புக்கான சிறுதொகை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் தண்ணீரைப் பராமரிப்பதற்கு ஆகும் செலவைப் பயனாளிகளிடம் பெறுவது அப்போதிருந்தே நடைமுறையிலிருந்து வருவது புரிகிறது. இப்போதைய காலகட்டத்துக்கு வருவோம். வைரம் அளவில் சிறியதாக இருந்தாலும் அதன் மதிப்பு மிக அதிகம். ஆனால், தண்ணீர் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதனால் சின்னஞ்சிறிய வைரத்தின் விலையோடு போட்டிபோட முடியாது. ஏனென்றால் மக்கள் அரிதாகவும் ஆசைக்காகவும் மட்டுமே வாங்கக் கூடியது வைரம். ஆனால், தண்ணீர் அனைவருக்குமான தேவை. வைரத்தைவிட தண்ணீர் மதிப்புமிக்கதாக இருப்பினும் அனைவருக்கும் எளிதாகக் கிடைக்க வேண்டும். அதனால் தண்ணீருக்கு எவரும் விலை நிர்ணயிக்க முடியாது. அதை விநியோகிப்பதற்கான செலவுகளுக்கு வேண்டுமானால் விலை நிர்ணயிக்கலாம். அத்தோடு, அடிப்படையில் அனைவருக்கும் தண்ணீரைக் கொடுப்பதற்கு ஆகும் செலவைக் குறைவாக வைப்பதால் எந்தவித நஷ்டமும் ஏற்பட்டுவிடாது. தேவைக்காக என்பது நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் தண்ணீரைக் குறிக்கிறது. ஆகவே அனைவருக்கும் கிடைக்கவேண்டியதை அடிப்படை உரிமையாகக் கருதுவது சரியே.

அதுவே, தொழிற்சாலைகள் மற்றும் விவசாய உற்பத்திகளுக்காகப் பயன்படுத்தப்படும் நீர் ஒரு மூலப்பொருளாகவே கருதப்பட வேண்டும். ஏனென்றால் அங்கே அது ஒரு சரக்கை உற்பத்தி செய்யும் துணைச் சரக்காகிறது. மற்ற துணைச் சரக்குகளைப் போலவே அதற்கும் விலை நிர்ணயம் செய்யவேண்டியது அவசியமாகிறது. ஒரு துணைச் சரக்கு அடிப்படை உரிமையாகக் கருதப்பட்டால் அதைப் பயன்படுத்துவதில் அளவுகோல் மற்றும் வரையறை நிர்ணயிப்பது இயலாதது. அளவுகோல் இல்லையெனில் அளவுக்கதிகமாகப் பயன்படுத்திப் பற்றாக்குறையை ஏற்படுத்திவிடலாம். எனவே, இங்கு தண்ணீர் சரக்காகவே கருதப்பட வேண்டும்.

மக்களின் பயன்பாட்டுக்காக விநியோகிக்கப்படும் தண்ணீர் அடிப்படை உரிமைதான். ஆனால், அது அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செய்வதற்காக அரசாங்கம் குழாய்களை அமைக்கிறது. அதற்கான செலவுகளைத் தவிர்த்தாலும், பராமரிப்புச் செலவுகளை அரசாங்கம் ஈடுசெய்ய வேண்டும். அனைத்துப் பகுதிகளுக்கும் தண்ணீர் சென்றடைய வேண்டுமென்ற நோக்கத்தில் கட்டமைத்த குழாய்களைப் பராமரிப்பதற்காகக் குறிப்பிட்ட அளவு வரி விதிக்கலாம். இது மக்களுக்குச் சிரமமின்றி அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக. ஆனால், தேவைக்கு மிகுதியாக மேலதிகமான தண்ணீர் தேவைப்படும்போது மக்கள் அவர்களின் பங்குபோக அடுத்தவரின் பங்கை எடுத்துப் பயன்படுத்துகிறார்கள். இந்த அதீதப் பயன்பாட்டினை விளிம்புநிலைப் பயன்பாடு (Marginal Utility) என்கிறார்கள். அப்போது அவர்கள் அதற்கு முந்தையதைவிடச் சற்று அதிக விலையைக் கொடுத்தே பயன்படுத்த வேண்டும் அப்போதுதான் அதன் மதிப்பை உணருவார்கள்.
இப்படியாகத் தண்ணீர் ஒரு சூழலில் அடிப்படை உரிமையாகவும், மற்றொரு சூழலில் விற்பனைச் சரக்காகவும் மாறி மாறிச் செயல்படுகிறது. பயன்பாடு என்ற ஒன்றிருக்கும்போது அதைப் பின்தொடர்ந்து பற்றாக்குறை என்ற ஒன்றும் வரவே செய்கிறது. தண்ணீர் அடிப்படை உரிமையாகப் பார்க்கப்படும் சூழ்நிலைகளில்கூட மக்கள் தங்கள் பங்குபோக அதிகமான தண்ணீரைச் செலவுசெய்வது குறித்து முந்தைய அத்தியாயத்தில் பார்த்திருப்போம். அதே சமயம் தொழிற்சாலைகளும் தங்களின் அளவுபோக அதிகமான தண்ணீரைப் பயன்படுத்துவதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. அந்தத் தண்ணீர் பற்றாக்குறை பெரும்பாலான பகுதிகளில் அன்றாடப் பணிகளைக் கேள்விக்குறியாக்கி விடுகிறது. அத்தோடு தொழிற்சாலைக் கழிவுகள் நீர்நிலைகளை மாசுபடுத்திவிடுவதால் நீர்சார்ந்த நோய்களுக்கும் வழிவகுக்கிறது. இத்தகைய சூழல்களில் முளைப்பவர்கள்தான் தண்ணீர் மாஃபியாக்கள்.

அரசாங்கம் குழாய் வழியாகத் தண்ணீர் திறந்துவிடுவது போலவே தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவும் பகுதிகளிலும் சுகாதாரமான நீருக்கான வசதிகள் அமைக்கப்படாத பகுதிகளிலும் வாகனங்கள் மூலமும் மற்ற சில வழிகளிலும் தண்ணீர் விநியோகத்தை இலவசமாகச் செய்திட வேண்டும். உலகில் நிலவும் தண்ணீர்ப் பற்றாக்குறை அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிப்பதால் அதைச் சரிசெய்யவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகிறது. அதைச் சரியாகச் செய்யாத சமயங்களில் தண்ணீர் மாஃபியாக்கள் உள்ளே நுழைந்து அரசாங்கக் குழாய்கள் மற்றும் நீர்நிலைகளிலிருந்து விதிகளை மீறித் தண்ணீர் எடுத்து அதிக விலைக்குத் தண்ணீர் பற்றாக்குறையான பகுதிகளில் விற்று அதிக லாபம் பார்க்கிறார்கள்.

தண்ணீர் எடுப்பதற்கென உலகளாவிய சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. உலகின் தண்ணீர் இருப்பு குறைந்துகொண்டே வரும் காலகட்டத்தில் நீடித்த பயன்பாட்டுக்கும், வருங்காலத்துக்கும் தேவையான சட்டங்களை நடைமுறைப்படுத்துவது தற்போதைய தேவையாகிவிட்டது. அத்தகைய சட்டங்களை மீறி தண்ணீரைத் திருடும் இந்தத் தண்ணீர் மாஃபியாக்கள் உலகளாவிய அளவில் தண்ணீர் சார்ந்த பிரச்னைகளை மேன்மேலும் தீவிரப்படுத்துகின்றனர்.

தண்ணீர்த் திருட்டு என்பது நாம் கேள்விப்படாத விஷயமாகவும், மிகைப்படுத்தப்பட்ட கற்பனையாகவும் தோன்றலாம். இரண்டு ஆண்டுகளுக்குமுன் துருக்கி நாட்டில் லாவோடிசியா (Laodicea) என்ற அகழ்வாராய்ச்சிப் பகுதியில் எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஒரு சலவைக்கல் கண்டெடுக்கப்பட்டது. அதில் `தண்ணீர் சட்டங்கள்' குறித்துப் பேசப்பட்டிருந்தது. அத்தோடு மற்றுமொரு வார்த்தையும் அதில் குறிப்பிட்டிருந்தது. அதுதான் `தண்ணீர் திருட்டு'. துருக்கியின் தண்ணீர் திருட்டு குறித்த குறிப்புகள் ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

- தொடரும்